

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் கே.பழனிசாமி இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 19-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, வி.மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தவே பிரதமரை சந்தித்ததாக ஓபிஎஸ் கூறினார்.
‘தமிழகத்தில் வருமானவரித் துறை சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன் கட்டுப்பாட்டில்தான் முதல்வர் பழனிசாமி அரசு உள்ளது. எனவே, அவர்களை நம்ப வேண்டாம்’ என மோடியிடம் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது.
இதன் பிறகு ஓரிரு நாளில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை தீர்மானிக்க முறைகேடுகளில் ஈடுபட்டதாக தினகரன் மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க முதல்வர் பழனிசாமி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று மாலை டெல்லி புறப்பட்டுச் செல்லும் முதல்வர், நாளை பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார்.
இந்த சந்திப்பின்போது வறட்சி நிவாரணம், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக மனு அளிப்பார் என்று தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மோடியுடன் அவர் ஆலோசிக்க இருப்பதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.