

கோயம்பேடு பஸ் நிலையத்தில் 90 லட்சம் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
சூளைமேடு, ஜக்காரியாக காலனி, 2-வது தெருவில் தண்டபாணி (50) என்பவரது வீட்டிலிருந்து கடந்த 17-ம் தேதி ரூ.44 கோடியே 79 லட்சம் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கோடம்பாக்கம் போலீ ஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் பழைய ரூபாய் நோட்டுகளுடன் சிலர் வலம் வருவதாக கோயம்பேடு போலீஸா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பஸ் நிலையத்தில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப் படுத்தினர்.
கோயம்பேட்டிலிருந்து கோவை நோக்கி செல்லும் தனியார் ஆம்னி பஸ்ஸில் சந்தேகத்துக்கிடமான முறை யில் அமர்ந்திருந்த 2 இளைஞர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பையை சோதித்துப் பார்த்தபோது அதில், ரூ.90 லட்சம் மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை சட்ட விரோதமாக வைத்திருந்த கோவையைச் சேர்ந்த முகமது சுபேர், முகமது ரிஷாத் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “தற்போது பறிமுதல் செய்யப் பட்டுள்ள பணம் கோவையைச் சேர்ந்த தொழில் அதிபருடையது. அவர் பாரிமுனையில் உள்ள ஒருவரிடம் கமிஷன் அடிப்படையில் பழைய பணத்தை மாற்ற இவர்கள் அனுப்பி வைத்துள்ளார். மாற்ற முடியாததால் பணத்தை மீண்டும் கோவை கொண்டு செல்ல முயன்ற போது பறிமுதல் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடக்கிறது” என்றனர்.