

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட காவல்துறையினர் நேற்று தங்களது தபால் வாக்கை பதிவு செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தல் பணியில் 1,206 அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் ஈடுபடவுள்ளனர். இவர்களில், ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்தவர்கள் தபால் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 58 போலீஸார் தபால் வாக்களிக்க படிவங்கள் வழங்கப்பட்டிருந்தன.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பெட்டியில், காவல்துறையினர் தங்கள் வாக்கை செலுத்தினர். தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கான மூன்றாவது கட்ட பயிற்சியின் போது, அவர்கள் தபால் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.