

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வெளியிடங்களைச் சேர்ந்தோர், வரும் 25-ம் தேதி மாலையுடன் வெளியேற வேண்டும், என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில், கலை நிகழ்ச்சிகள், நாடகம், கோலப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி அலுவலகத்தில், நேற்று ராட்சத பலூன் பறக்கவிடப் பட்டது. இந்நிகழ்வில், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், உதவி ஆட்சியர் பொன்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் கூறியதாவது: அனுமதி பெறாமல் இயங்கி வந்த 8 தேர்தல் பணிமனைகள் அகற்றப்பட்டன. 14 பணிமனைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதில், 4 பணிமனைகள் அனுமதி பெற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தற்போது இருக்கும் பணிமனைகள் அனைத்தும் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன.
இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு 455 புகார்கள் வந்துள்ளன. இதில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதோடு, அங்கு போலீஸாருடன், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
ஈரோடு கிழக்கில் வரும் 25-ம் தேதி மாலை 5 மணிக்கு பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. அதன் பிறகு, ஈரோட்டில் தங்கியிருக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிக்காக வந்திருக்கும் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், ஈரோட்டில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொள்வர். இதுவரை 20 சதவீத வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டுள்ளது. ‘பூத் சிலிப்’ பெற இயலாதவர்கள், வாக்குப்பதிவு நாளன்று, வாக்குச் சாவடியில் அதைப் பெற்றுக் கொள்ளலாம். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளில், தபால் வாக்களிக்க 352 பேர் மனு செய்திருந்தனர்.
இவர்களில் உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால், 4 பேர் வாக்களிக்கவில்லை. மீதமுள்ள 348 வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, என்றார். தேர்தல் விதிமீறல் தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கு 455 புகார்கள் வந்துள்ளன. இதில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.