Published : 22 Feb 2023 06:16 AM
Last Updated : 22 Feb 2023 06:16 AM

திருவள்ளூர் | கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 136 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: விழிப்புணர்வு கருத்தரங்கில் ஆட்சியர் தகவல்

குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த கருத்தரங்கு திருவள்ளூரில் நேற்று நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு பள்ளி மாணவ - மாணவியர் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்களை வெளியிட்டார்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 136 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் சில்ட்ரன் பிலிவ் ஆகியவை சார்பில் குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று திருவள்ளூரில் நடைபெற்றது.

இதில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்று, குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து பல்வேறு விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு பள்ளி மாணவ - மாணவியர்களால் வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியங்களை வெளியிட்டார்.

தொடர்ந்து, அவர் 30 பேருக்கு, உயர் கல்விக்காக ரூ.3 லட்சம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார். இதையடுத்து, கல்வி,பாலின சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தின் பயணத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசியது: திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை, குழந்தை திருமணம், முக்கியமான ஒரு பிரச்சினை இருக்கிறது. திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டங்களில் அதிகளவில் குழந்தை திருமணம் செய்வதாக தகவல் வருகின்றன. அதன்பேரில், குழந்தை திருமணத்தை நடக்காமல் இருக்க பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளில், திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 136குழந்தை திருமணங்கள் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களின் பெற்றோர்களிடமிருந்து, ’என்னுடைய பெண் குழந்தைகளுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்ய மாட்டோம்’ என்று ஒரு அஞ்சல் அட்டையில் உறுதி சான்று பெறப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கருத்தரங்கில், திருவள்ளூர் சார் ஆட்சியர் (பொறுப்பு) கேத்ரின் சரண்யா, சில்ட்ரன் ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டுநிறுவன இயக்குநர் ஸ்டீபன், பிலிவ் நிறுவன திட்ட மேலாளர் லாவண்யா கேசவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x