

சென்னை: தமிழகத்தில் பூத் கமிட்டி அளவில் பாஜகவை பலப்படுத்த வேண்டும் என தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜகவின் தரவுதள மேலாண்மைப் பிரிவு மற்றும் பூத் கமிட்டிகளை வலிமைப்படுத்தும் பிரிவு சார்பில் சென்னை, தியாகராய நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று முன்தினம் சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் பங்கேற்று பேசியதாவது:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்குசீர்குலைந்துள்ளது. குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர் திமுக கவுன்சிலரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. பலகட்ட போராட்டத்துக்குப் பிறகே கவுன்சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அண்மையில் பாஜக பட்டியலினப் பிரிவு மாநிலத் தலைவர் வாகனத்தை விசிகவினர் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கெல்லாம் சேர்த்து, வரும் தேர்தல்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.
தொடர்ந்து, தமிழக பாஜகமேலிட இணை பொறுப்பாளர்சுதாகர் ரெட்டி பேசும்போது, "கட்டபஞ்சாயத்து, மாஃபியா போன்றவற்றை ஆட்சி அதிகார பலத்தோடு திமுக செய்து வருகிறது" என்றார்.
இக்கூட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சசிகலா புஷ்பா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.