

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியின் கீழ், காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை செய்ய குளிரூட்டப்பட்ட விற்பனை கடைகள் அமைக்க தோட்டக்கலைத் துறை ரூ. 5.25 லட்சம் மானியம் வழங்குகிறது.
மதுரை மாவட்டத்தில் பழங்கள், காய்கறிகள், பூக்கள், கிழங்குகள், நவதானிய பயிர்கள், மருத்துவப் பயிர்கள் மற்றும் தோட்டப் பயிர்களை 20,000 ஹெக்டேரில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். காய்கறிகள், பழங்கள், மலர்கள் எல்லாம் குறுகியகாலப் பயிர்கள். இவற்றை அறுவடை செய்து விற்பனை நிலையங்களில் கூடுதல் நாட்கள் வைத்திருந்து விற்பனை செய்ய முடியாது. ஆகையால் விளைப்பொருட்களை பாதுகாப்பாக உரிய வகையில் சேமித்து விவசாயிகள் அதிகம் லாபம் பெற விற்பனை சார்ந்த மானிய திட்டங்களை தோட்டக் கலைத்துறை தற்போது அதிகளவில் செயல்படுத்தத் தொடங்கி உள்ளது. அந்த வகையில் காய்கறிகள், பழங்கள், மலர்களை பாதுகாப்பாக வைத்திருந்து விற்பனை செய்ய 200 சதுர அடியில் குளிரூட்டப்பட்ட விற்பனைக் கடைகள் அமைக்க தோட்டக்கலைத்துறை ரூ. 5.25 லட்சம் மானியம் மானியம் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதி கூறியதாவது:
200 சதுர அடியில் இந்த குளிரூட்டப்பட்ட கடை அமைக்க ரூ. 15 லட்சம் செலவாகிறது. இதில் நிலம், கட்டுமானப் பணிக்கு ரூ.10 லட்சம், ஏசி (குளிரூட்டப்பட்ட வசதி) அமைக்க ரூ. 2.50 லட்சமும், தராசு மற்றும் விளை பொருட்களை அடுக்கி வைப்பதற்கான அலமாரிகள் அமைக்க ரூ. 2.50 லட்சம் வரை செலவாகும்.
வேலையில்லாத பட்டதாரிகள், வங்கிக் கடன் பெற்று, மானியமும் பெற்று இந்த குளிரூட்டப்பட்ட விற்பனை நிலையங்களை தொடங்கலாம். அதற்கு தோட்டக்கலைத்துறையே அவர்களுக்கு வங்கி கடன் பெற பரிந்துரை செய்ய தயாராக உள்ளது. சுய உதவிக்குழுவினரும், விவசாயிகளும் தங்களுக்குள் குழுக்களை அமைத்து இந்த குளிரூட்டப்பட்ட கடைகளை அமைக்கலாம். வட இந்தியாவில் இந்த திட்டத்தை பயன்படுத்தி ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால், தோட்டக்கலைத்துறை மானியம் வழங்க தயாராக இருந்தும் இந்த திட்டத்தை பயன்படுத்த யாருக்கும் ஆர்வமில்லை.
இந்த காய்கறி விற்பனை நிலையங்களை அமைக்க கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண் விளைபொருள் விற்பனைக் குழு, வணிக வாரியங்கள், மாநகராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவையும் முன் வரலாம். இந்த கடைக்கான கருத்துருவின் மொத்த மதிப்பீட்டில் நிலத்துக்கான விலை கிராம பகுதிக்கு 15 சதவீதமும், நகர் பகுதிக்கு 25 சதவீதமும் இருக்க வேண்டும். கடைகள் அமைக்க செலவாகும் ரூ. 15 லட்சத்தில் 35 சதவீதம் மானியமாக அதாவது ரூ. 5.25 லட்சத்தை தோட்டக்கலைத் துறை வழங்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொழில் தொடங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விளைபொருள் சேகரிப்பு மையம்
காய்கறிகள், பழங்கள், மலர்களை சேமித்து வைத்து விவசாயிகள் லாபம் பெற்றிட விளை பொருட்கள் சேகரிப்பு மையம் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் காய்கறிகளை தரம் பிரித்து சுத்தம் செய்வதற்கு 800-1000 ச.மீ அளவில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை விளை பொருட்கள் சேகரிப்பு மையம் அமைக்க ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் 40 சதவீதம் மானியமாக ரூ. 6 லட்சம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற, மதுரை மாவட்ட வட்டார தோட்டக்கலைத் துறை அதிகாரிகளை அணுகலாம்.