

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தர்மம் வெற்றி பெற அதிமுகவை ஆதரிக்க வேண்டும், என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து, பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதியில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது: அதிமுக ஆட்சியில் இருந்த போது செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், மடிக்கணினி, அம்மா கிளினிக் போன்ற திட்டங்ளை முடக்கி, ஏழையின் வயிற்றில் திமுக அடிக்கிறது.
கரோனாவில் இருந்து மீண்டு வரும் மக்கள் மீது, வீட்டுவரி, மின் கட்டணம், பால் விலையை உயர்த்தி மும்முனை தாக்குதல் நடத்தியுள்ளனர். மகளிருக்கான உரிமைத்தொகை, சமையல் எரிவாயு மானியம், கல்விக்கடன் போன்ற வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளனர். இந்தியாவின் பொருளாதார உயர்விலே இஸ்லாமியர்கள் பங்கு மிகப்பெரியது.
அத்தகைய இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக அரணாக இருந்து வருகிறது. அவர்களுக்கு பாதிப்பு என்றால், அதிமுகவும், தமாகாவும் உடனே குரல் கொடுத்து வருகிறோம். இஸ்லாமியர்களின் உயர்வு நாட்டின் உயர்வு என்று கருதுகிறோம். இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் நாம் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும். இந்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களை அவமதிக்கத் தொடங்கிவிட்டன. ஏழை மக்களுக்கு அழுத்தம் கொடுத்து, ஏமாளியாக்கி பட்டியில் பூட்டி வைத்து தரக்குறைவாக நடத்து கின்றனர்.
இது ஜனநாயகம் அல்ல; பணநாயகம். இங்கு அநியாயத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் தர்மம் ஜெயிக்க வேண்டுமா; அதர்மம் ஜெயிக்க வேண்டுமா என மக்கள் முடிவு எடுக்க வேண்டும், என்றார்.