

கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளியில் சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று விவசாயிகள், காய்கறி மாலை அணிந்து, பிச்சை பாத்திரம் ஏந்தியபடி நடைபயணமாகச் சென்று சூளகிரி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி நாகமங்கலம் ஊராட்சிகளில் 5-வது சிப்காட், 3,034 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. இதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத் தினால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்படுவர்.
இதேபோல், சிப்காட் அமைய உள்ள பகுதியில் குடியிருப்புகளும் உள்ளதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரேதொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
48-வது நாளாக போராட்டம்: இப்போராட்டத்தின் 48-வதுநாளான நேற்று 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெற்றியில்நாமம் போட்டுக் கொண்டும், காய்கறி மாலை அணிந்து கொண்டும், கைகளில் பிச்சைபாத்திரம் ஏந்தியபடி, உத்தனப் பள்ளியில் இருந்து சூளகிரி நோக்கி நடை பயணம் மேற்கொண்டனர்.
விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, விவசாயிகளை அரசு காக்க வேண்டும் என ஒலி பெருக்கி மூலம் முழக்கங்கள் எழுப்பியவாறு 15 கி.மீ தூரம் நடந்தே சென்ற விவசாயிகள், சூளகிரி வட்டாட்சியர் அனிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது, சிப்காட் அமைக்க விளைநிலங்களை தரமாட்டோம், எங்களது போராட்டம் தொடரும், என்றனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் உத்தனப் பள்ளியில் காத்திருப்புப் போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்தனர். சூளகிரி வட்டாட்சியரிடம் மனு கொடுத்த பின்னர் மீண்டும் உத்தனப் பள்ளியில் காத்திருப்புப் போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்தனர்.