

திருச்சி: காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல் நிலைப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், நேற்று திருச்சி வந்த முதல்வர் முக.ஸ்டாலினிடம் அளித்த மனு:
காட்டூர் பாப்பாக் குறிச்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கடந்தாண்டு நவ.26-ம் தேதி வானவில் மன்றம் தொடங்கிவைக்க முதல்வர் வருகை தந்தார். இதையொட்டி, பள்ளியில் இருந்த 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால், அந்தக் கட்டிடம் மீண்டும் கட்டப்படாததால், போதிய இடமின்றி பள்ளி மாணவிகள் வராண்டாவிலும், ஆய்வுக் கூடத்திலும் பயின்று வருகின்றனர்.
போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால், வரும் கல்வியாண்டில் ஆங்கில வழி வணிகவியல் பாடப் பிரிவு நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. வகுப்பறை இல்லாததால் ஒரு பாடப் பிரிவை நீக்குவது சரியான நடவடிக்கை அல்ல. எனவே, மாணவிகளின் நலனைக் கருத்திக் கொண்டு, பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடங்களைக் கட்டித் தர வேண்டும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர், முதல்வரின் தனிப் பிரிவு ஆகியவற்றுக்கு ஏற்கெனவே மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், நேற்று முதல்வரிடம் நேரில் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.