

நாகர்கோவில்: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் சமய மாநாடு நடத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஹைந்தவ சேவா சங்கம் நடத்தும் மாநாட்டில் இந்து அறநிலையத்துறை இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது. மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழா மார்ச் 5-ம் தேதி தொடங்குகிறது. வழக்கமாக இக்கோயில் திருவிழாவின் போது, ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் இந்து சமய மாநாடு நடைபெறும்.
கடந்த 86 ஆண்டுகளாக மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வாண்டு இந்து சமய அறநிலையத் துறை சமய மாநாட்டை நடத்தும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு பாஜக, இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்து அறநிலையத் துறையின் மாநாட்டுக்கு போட்டியாக, ஹைந்தவ சேவா சங்கம் சார்பிலும் மாநாடு நடத்த அழைப்பிதழ் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்டது.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். சாமி தரிசனம் செய்த அவர், கோயில் திருப்பணிகளையும், சமய மாநாடு நடைபெற உள்ள இடத்தையும் பார்வையிட்டார். தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் குமாரகோயில் வேளிமலை முருகன் கோயிலுக்கு சென்று ஆய்வு செய்தார்.
சொத்துகள் மீட்பு: தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.4,000 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு பணி தொடரும். மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருவிழா மார்ச் 5-ம் தேதி தான் தொடங்குகிறது.
சமய மாநாடு பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட இந்து அமைப்பினருடன் அறநிலையத்துறை அதிகாரிகள் பேசி வருகின்றனர். இந்த பிரச்சினை சுமுகமாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக அரசை பொறுத்தவரை இதை பெரிதாக்க விரும்பவில்லை. வேளிமலை முருகன் கோயிலில் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: இந்நிலையில், மண்டைக்காடு சமய மாநாடு தொடர்பாக நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று காலை 11.30 மணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஹைந்தவ சேவா சங்க அமைப்பினருடன் அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தை நடத்தினார்.
மதியம் 1.30 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையை முடித்து வெளியேறினர். அதன் பின்னர் மாலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, வழக்கம்போல் ஹைந்தவ சேவா சங்கம் மண்டைக்காடில் நடத்தும் இந்து சமய மாநாட்டில் இந்து அறநிலையத்துறை இணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு பொன் ராதாகிருஷ்ணன் தலைமையிலான இந்து அமைப்பினர் சம்மதம் தெரிவித்தனர். இதன் மூலம் கடந்த சில நாட்களாக நிலவிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.