திருப்பத்தூரில் ஆபத்தை உணராமல் லாரி மீது பயணிக்கும் சிறுவர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பத்தூரில் செப்டிக் டேங்க் லாரி மீது ஆபத்தை உணராமல் பயணிக்கும் சிறுவர்கள். படம்:ந.சரவணன்.
திருப்பத்தூரில் செப்டிக் டேங்க் லாரி மீது ஆபத்தை உணராமல் பயணிக்கும் சிறுவர்கள். படம்:ந.சரவணன்.
Updated on
1 min read

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆபத்தை உணராமல் செப்டிக் டேங்க் லாரிகளின் பக்கவாட்டில் சிறுவர்களை அமர வைத்து வேலை வாங்கும் லாரி உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை விதிகளை காற்றில் பறக்கவிடும் வாகன ஓட்டிகள் அசுர வேகத்திலேயே பயணம் செய்து வருகின்றனர். காவல் துறை சார்பில் எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சாலை விதிகளை வாகன ஓட்டிகள் பின்பற்றாத வரை விபத்துகள் குறைய வாய்ப்பில்லை என சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

திருப்பத்தூர் அடுத்த புதுப்பேட்டை அருகாமையில் உள்ள மல்லப்பள்ளியில் இருந்து திருப்பத்தூர் நகரை நோக்கி செப்டிக் டேங்கர் லாரி ஒன்று நேற்று வேகமாக நகரப்பகுதிக்குள் நுழைந்தது. லாரி ஓட்டுநரும், கிளினீரும் லாரியின் உள்ளே அமர்ந்தபடி வந்தனர்.

அதில் பணியாற்றக்கூடிய சிறுவர்கள் (3 பேர்) லாரியின் பக்கவாட்டில் உள்ள டீசல் டேங்க் மீதும், லாரியின் பின் மற்றும் முன் சக்கரத்தின் மீதுள்ள தடுப்பு மீதும் அமர்ந்தபடி ஆபத்தை உணராமல் நீண்ட தொலைவுக்கு பயணம் செய்து வந்ததை கண்ட பொதுமக்கள் சிறுவர்களை பார்த்து ஏன் இப்படி அமர்ந்து செல்கிறீர்கள் என கேட்டு ஆதங்கப்பட்டனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் நகர் பகுதியில் கனரக வாகனங்கள் அதிகமாக வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. அதேபோல, செப்டிக் டேங்க் லாரி, போர்வெல் லாரிகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. அதில், பணியாற்றக்கூடிய ஊழியர்கள், குறிப்பாக சிறுவர்கள் ஆபத்தை உணராமல் லாரிகள் மீதும், பக்கவாட்டிலும் அமர்ந்தபடியே நீண்ட தொலைவுக்கு பயணம் செய்கின்றனர்.

லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்தால், லாரி மீது எந்த பாதுகாப்பும் இல்லாமல் அமர்ந்து பயணம் செய்யும் சிறுவர்கள் நிலை என்ன ஆவது. இதையெல்லாம், போக்குவரத்து துறை அலுவலர், வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர், காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து வார விழா நாட்களில் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் போதாது? தினசரி ஆய்வு நடத்தி போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகளுக்கு கற்றுக் கொடுத்தால் மட்டுமே சாலை விபத்துகள் குறையும்’’ என்றனர்.

இது குறித்து போக்குவரத்து காவல் துறையினரிடம் கேட்டபோது, ‘‘ நகர்பகுதியில் தினசரி ஆய்வு நடத்துகிறோம். சாலை விதிகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதையும் மீறி சில இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. இருப்பினும், இது தொடர்பாக லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in