திணறும் சென்னை மாநகராட்சி முதல் இடைத்தேர்தல் அப்டேட் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.21, 2023

திணறும் சென்னை மாநகராட்சி முதல் இடைத்தேர்தல் அப்டேட் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ பிப்.21, 2023
Updated on
2 min read

கொசுக்கள் அதிகரிப்பு - திணறும் சென்னை: சென்னையில் அதிகரித்துள்ள கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி சார்பில் ஒரு வாரம் தீவிர கொசு ஒழிப்புப் பணி மேற்கொண்டும் பலன் கிடைக்காததால், கொசுக்களை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஒரு வார தீவிர பணியில் கொசு புழுக்கள் உற்பத்தி கட்டுக்குள் வந்துவிட்டது. முதிர் கொசுக்களை அழிப்பதற்காக 2-வது சுற்று பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வரும் மார்ச் மாதம் வரை சென்னையில் குளிர் நிலவும் எனக் கருதப்படுகிறது. ஓரிரு வாரங்களில் முதிர் கொசுக்களைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.

பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி : தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனுவினை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஏற்கெனவே மற்றொரு வழக்கில் இது சம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதனிடையே, பணப்பட்டுவாடா நடைபெறுவதால் ஈரோடு கிழக்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேமுதிக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: தமிழக அரசு மேல்முறையீடு: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி அளிக்க போலீஸாருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

உதயநிதியின் செங்கல் பிரச்சாரத்திற்கு அண்ணாமலை பதிலடி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டவில்லை என செங்கல்லை காட்டி ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தருமபுரியில் 14 ஆண்டுகள் ஆகியும் திமுக அறிவித்த தொழிற்பேட்டை அமையவில்லை எனக் கூறி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் செங்கல்லை காட்டி விளக்கம் அளித்தார்.

உக்ரைன் போர் ஏன்? - புதின் புதிய விளக்கம்: ரஷ்யாவின் இருத்தலுக்காகவே உக்ரைனுடன் போர் நடத்திக் கொண்டிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, உக்ரைன் உடனான ரஷ்யாவின் போரை, சர்வதேச அளவிலான மோதலாக மேற்கத்திய நாடுகள் சித்தரிக்கின்றன என்றும், ரஷ்யாவை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் தலைநகர் கீவ் சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரூ.4,135 கோடி மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குவதாக அவர் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

உத்தவ் தாக்கரே வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணை: சிவ சேனா கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை ஏக்னாத் ஷிண்டே தரப்புக்கே சொந்தம் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வர இருக்கிறது.

பணமதிப்பிழப்பு: நைஜீரியாவில் பதற்றம்: ஊழலை ஒழிப்பதற்காக நைஜீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அந்நாட்டு மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்நாட்டின் 200 நைரா, 500 நைரா, 1000 நைரா நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நெருக்கடிக்கு தள்ளப்பட்ட மக்கள் தங்களது ரூபாய் நோட்டுகளை பரிமாற்றம் செய்து கொள்ள வங்கிகளில் குவிந்துள்ளனர். இதனால், அந்நாட்டில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. கோபமடைந்த மக்கள் ஏடிஎம் மற்றும் வங்கிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை: ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தளபதியான பஷிர் அகமது பிர் எனும் இம்தியாஸ் ஆலம் பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தளபதியாக செயல்பட்டு வந்தவர் இம்தியாஸ் ஆலம் என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கியில் மீண்டும் பூகம்பம் - 3 பேர் உயிரிழப்பு: துருக்கியில் திங்கள்கிழமை புதிதாக ஏற்பட்ட பூகம்பத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். முன்னதாக, சிரியாவை ஒட்டிய துருக்கி பகுதியில் கடந்த 6-ம் தேதி மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in