Published : 15 May 2017 03:06 PM
Last Updated : 15 May 2017 03:06 PM

போக்குவரத்து தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுக: திருமாவளவன்

தமிழக அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளது. இந்த அறப்போராட்டத்தை விசிகவு, விசிகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் விடுதலை முன்னணியும் வரவேற்று ஆதரிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்துக் கழகம் பல ஆயிரம் கோடி ரூபாய் நட்டத்தில் இயங்கிவருவதால், ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தையும்கூட நிர்வாகத்தால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு ரூபாய் 5 கோடி வீதம் ஓராண்டுக்கு ரூபாய் 1800 கோடி என கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பெரும் நட்டத்தில் போக்குவரத்துக் கழகம் இயங்கிவருவது அதிர்ச்சியளிக்கிறது.

இதனால், ஓய்வுபெற்றோருக்கு வழங்கப்படவேண்டிய பணப்பயன்கள் ஏறத்தாழ ரூ.1652.83 கோடி பாக்கியாகவுள்ளது. அடுத்து, பல்வேறு வகைகளில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூபாய் 4800 கோடி இன்னும் உரிய நிறுவனங்களுக்குச் செலுத்தப்படாத நிலை உள்ளது.

ஒட்டுமொத்தத்தில் போக்குவரத்துக் கழகம், கடந்த 13.03.2017 வரையில் சுமார் 18,300 கோடி ரூபாய் நட்டத்தில் இயங்குகிறதென தமிழக அரசு அறிவித்துள்ளது. இவற்றைக் காரணம் காட்டி தொழிலாளர்களைப் பலியாக்குவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

எனவே, தமிழக அரசு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினரோடு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்தம் கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு முடிவுகாண முன்வர வேண்டும்.

போராட்டம் நாட்கணக்கில் நீடித்தால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே, வறட்டுத்தனமான பிடிவாதமில்லாமல், நாட்களைக் கடத்தாமல் தமிழக அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x