

சென்னை: முந்தைய ஆண்டை விட நடப்பாண்டில் தீவுத்திடல் சுற்றுலா கண்காட்சிக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தமிழக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் 27 அரசு துறைகளைச் சேர்ந்த அரங்குகளும், 21 பொதுதுறை அரங்குகளும், மத்திய அரசின் 2 அரங்குகளும், பிற மாநில அரசுகளின் 3 அரங்குகளும் என 53 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
அதேபோல், மஞ்சப்பை வழங்கும் இயந்திரம், விர்சுவல் ரியாலிட்டி(மெய் நிகர்) முறையில் காட்சிப்படுத்தப்படும் புராதன சின்னங்கள் உள்ளிட்ட பல்வேறுசிறப்பம்சங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இது தவிர தீவுத்திடலில் 125சிறிய கடைகள், 70 ஆயிரம் சதுர அடிப் பரப்பளவில் பொழுதுபோக்கு வளாகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள், திறந்தவெளி திரையரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. தீவுத்திடல் பொருட்காட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் கடந்த காலங்களை ஒப்பிடும்போது, நடப்பாண்டில் சுற்றுலா கண்காட்சிக்கு வருகை தரும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் 43 நாட்களில் 5,11,930 பார்வையாளர்களும், 2020-ம் ஆண்டில் 43 நாட்களில் 5,82,756 பேரும்வந்த நிலையில், நடப்பாண்டில் 43 நாட்களில் 6,61,831 பேர் வருகை தந்துள்ளனர். அதன்படி, இந்தாண்டு சுற்றுலா கண்காட்சிக்கு 12 லட்சம் பார்வையாளர்களைப் பெற சுற்றுலாத்துறை இலக்கு வைத்துள்ளது.