

திண்டுக்கல்: வீட்டுமனைப் பட்டா வழங்கிய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு பாசிமாலை அணிவித்து நரிக்குறவர் இன மக்கள் நன்றி தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ச.விசாகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வே.லதா முன்னிலை வகித்தார். அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் தங்கள் குறை களை மனுக்களாக வழங்கினர்.
சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டு 15 நாட்களுக்குள் தீர்வு காண ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகி, மொழிப் போர் தியாகி மற்றும் இ.சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் 31 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் வழங்கினார்.
அப்போது தாங்கள் செய்த பாசி மாலையை ஆட்சியர் ச.விசாகனுக்கு அணிவித்து நரிக்குறவர் இன மக்கள் நன்றி தெரிவித்தனர்.