Last Updated : 21 Feb, 2023 01:33 AM

1  

Published : 21 Feb 2023 01:33 AM
Last Updated : 21 Feb 2023 01:33 AM

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்; ஒரே சாதி’ என அறிவித்தால் இடஒதுக்கீடு தேவையில்லை - கி.வீரமணி

சேலம்: ‘இந்தியாவில் இன்னும் சாதி ஒழிக்கப்படவில்லை. ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது போல, ஒரே சாதி என்று அறிவித்து, சாதியை ஒழித்துவிட்டால் இட ஒதுக்கீடு தேவையில்லை,’ என திக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் பேசினார். "சேலத்தில் கடந்த 1938-ம் ஆண்டு பெரியார், சேலம் செவ்வாய்பேட்டையில் சுயமரியாதை பிரச்சார சங்கம் தொடங்கினார். சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த கட்டிடம் , பிற்காலத்தில் மனுர்குல தேவாங்க சங்கத்தினர் கைவசம் இணைத்துக் கொண்டனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு, எங்களுக்கு வந்த சாதகமான தீர்ப்பால் சங்க கட்டிடத்தை சட்ட ரீதியாக மீட்டுள்ளோம்.

மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கை இக்கட்டிடத்தில் மேற்கொள்ளப்படும். ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றி ஏற்கனவே உறுதியாகிவிட்டது. இந்த இடைத்தேர்தலில் பெரும் ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும். தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தன்னிலை தாழ்ந்து, முதல்வர் ஸ்டாலினை தரம் தாழ்த்தி பேசி வருகிறார். இவரின் தரம் தாழ்ந்த பேச்சால், இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு பெரும் வெற்றியை தரும்.

தேர்தல் நேரத்தில் கருத்துக்களையும், கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமே தவிர, தரம் தாழ்த்தி பேசக்கூடாது. வெற்றி, தோல்வியைவிட கட்சி உறுதியாக உள்ளதா என்பதே முக்கியம். பாஜக-வின் கைங்கரியத்தால் அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. தாய் கழகம் என்ற அடிப்படையில் அதிமுக-வினரை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டியது எங்களது கடமை.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் சின்னத்தை பெறுவதற்காக, ஷிண்டே அணியினர் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.2000 கோடி லஞ்சம் கொடுத்ததாக பகிரங்க குற்றச்சாட்டு வெளியாகி உள்ளது என்ற உங்கள் கேள்விக்கு, தன்னிச்சையாக தேர்தல் ஆணையம் செயல்படவில்லை என்பதை உச்ச நீதிமன்றமே அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையமானது, மோடியின் ஆட்சியில் சுதந்திரமாக இயங்கவில்லை என்பதை, உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னால் கூறியுள்ளது.

தேர்தல் ஆணையம் என்பது பாஜக அரசாங்கத்தின் குறிப்பாக ஆர்எஸ்எஸ் இயக்கப்படும் பாஜக அரசாங்கத்தினுடைய இன்னொரு அங்கமாக மாறிவிட்டது என்பதை நாம் சொல்லவில்லை, உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. டெல்லியில் ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் நுழைந்து ஏவிபி அமைப்பு மாணவர்களை தாக்கியது கண்டனத்துக்குரியது. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளது. ஆனால், அங்கேயே ஒரு பல்கலைக்கழகத்துக்குள் ஏவிபி மாணவர்கள் நுழைந்து அராஜகத்தில் ஈடுபடுவது என்பது, அங்கு சட்டம் ஒழுங்கு உள்ளதா என்ற கோள்வி எழுகிறது.

இதுபோன்ற சூழலில், பாஜக தலைவர் அண்ணாமலை, அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளதா என கேள்வி எழுப்பி வருகிறார். இந்தியாவில் இன்னும் சாதி ஒழிக்கப்படவில்லை. ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது போல, ஒரே சாதி என்று அறிவித்து, சாதியை ஒழித்துவிட்டால் இடஒதுக்கீடு தேவையில்லை. நீட் தேர்வு, ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஆனால், தற்கொலைகளை பற்றி மத்திய அரசு கவலைப்படுவதில்லை.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பாக திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முறையாக திட்டம் வகுத்து மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னரும், ஆளுநர் அதில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். ஆளுநர் சொல்ல வேண்டிய விஷயங்களை, பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார். அவர் எப்போது ராஜ்பவனின் செய்தி தொடர்பாளரானார் என்பது தெரியவில்லை" இவ்வாறு கி.வீரமணி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x