

பெரியாறு அணைப்பகுதியில் பெய் துள்ள திடீர் மழையால் நீர்வரத்து விநாடிக்கு 561 கன அடிவரை இருப்பதால் மதுரைக்கு மே மாதம் வரை குடிநீர் விநியோகிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடும் வறட்சியால் 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த ஏப்.28-க்கு முன்புவரை 21 அடிவரை கீழே இறங்கியது. அப்போது நீர் இருப்பு 123 மில்லியன் கன அடி மட்டுமே இருந்ததால், மதுரைக்கு ஒரு வாரம்கூட தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. பெரியாறு அணையில் 109.60 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது. ஆனாலும் மதுரையின் குடிநீருக்காக 3 நாட்களுக்கு மட்டும் தினசரி 200 கன அடி வீதம் கடந்த ஏப்.28-ல் தண்ணீர் திறக்கப்பட்டது. 108 அடிக்கு கீழே தண்ணீர் எடுக்க முடியாது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் மே 2-வரை தொடர்ந்து தண்ணீர் எடுக்கப்பட்டது. அதே நேரம் அன்று நள்ளிரவு முதல் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யத்துவங்கியது. இதனால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து நேற்று விநாடிக்கு 561 கன அடியாக உயர்ந்தது. யாரும் எதிர்பாராத நிலையில், இந்த மழை அதிகாரிகளை மகிழ்ச்சிப்படுத்தியது.
மேலும் பெரியாறில் திறக்கப்பட்ட தண்ணீரை திருட்டு போகாமல் வைகை அணைக்கு கொண்டுவர தேனி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர், பொதுப்பணித்துறை, மாநகராட்சி பொறியாளர்கள் என 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு நியமிக்கப்பட்டது. இவர்கள் பெரியாறு அணைப்பகுதியிலிருந்து வைகை அணைவரை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருட்டுத்தனமாக தண்ணீரை எடுக்க ஆற்றுக்குள் இணைக்கப்பட்டிருந்த பலநூறு குழாய்கள் அகற்றப்பட்டன. மேலும் ஆற்றுப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய மின் மோட்டார்களுக்கு வழங்கப்பட்டிருந்த இலவச மின் இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப் பட்டது. இதனால் பெரியாற்றிலிருந்து தண்ணீரை உறிஞ்சி எடுக்க முடியாத தால், வைகை அணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக உயர்ந்து நேற்று வினாடிக்கு 133 கன அடியானது. இதற்கு முன்பு பெரியாறு அணை யிலிருந்து 200 கன அடி திறக்கப் பட்டால் வைகைக்கு 40 கன அடிவரை மட்டுமே வந்தது. ஆனால் கடந்த ஏப்.28-ம் தேதிமுதல் இந்த அளவு 75, 100 என உயர்ந்து 133 கன அடியை தொட்டது. ஒரு நாள் தண்ணீர் வரத்து மதுரையின் 3 நாள் குடிநீர் தேவைக்கு போதுமானதாக இருந்தது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெரியாறு அணையில் 109.40 அடி தண்ணீர் இருந்தது. அணையில் மொத்த நீர் இருப்பு 817 கன அடியாக இருந்தது. 7 நாட்களாக தொடர்ந்து 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டும் பெரியாறு அணையில் நீர்மட்டம் குறையாத அளவிற்கு மழை நீர் வரத்து இருந்தது.
வைகை அணையில் தற்போது ஒரு அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்தது. நேற்றுமுன்தினம் 147 மி.க.அடி மட்டுமே இருந்த தண்ணீர் நேற்று 153-ஆக உயர்ந்தது. தொடர்ந்து நீர்வரத்து 133 கன அடியாக உள்ளதால் மதுரைக்கு குடிநீர் பெறுவதில் சிரமம் இருக்காது.
இது குறித்து மதுரை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் கூறுகையில், பெரியாறு அணைப்பகுதியில் பெய்துள்ள திடீர் மழையால் மதுரையின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. தற்போதுள்ள நிலையில், மே மாதம் முழுவதும் மதுரைக்கு குடிநீர் வழங்க தண்ணீர் உள்ளது. ஜூன் தொடக்கத்திலேயே மழை வந்துவிடும் என்பதால் குடிநீருக்கு பிரச்சினை இருக்காது. மேலும் ஒரு மழை பெய்தால் எப்போதும்போல் 100 சதவீதம் குடிநீர் வழங்கலாம். இருக்கும் தண்ணீரை முறையாக விநியோகிக்க இன்று அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடக்கிறது என்றார்.