Published : 20 Feb 2023 07:12 PM
Last Updated : 20 Feb 2023 07:12 PM
சென்னை: 7ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், காயிதே மில்லத் தமிழ் மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் எனக் கூறியதாக இடம்பெற்றுள்ள தகவலை நீக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "ஏழாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் 52-வது பக்கத்தில் கண்ணியமிகு தலைவர் என்ற தலைப்பில் காயிதே மில்லத் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடத்தில், மொழிக்கொள்கை என்ற துணை தலைப்பில், சுதந்திரத்துக்குப் பின் ஆட்சி மொழியை தேர்வு செய்வதற்கான அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில், பழமையான தமிழ்மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என காயிதே மில்லத் பேசியதாக தவறான தகவல் இடம்பெற்றுள்ளது.
அந்தக் கூட்டத்தில் தமிழ் பழமையான மொழியாக இருந்தாலும், அதிக மக்கள் பேசும் மொழியாக இல்லாததால் அதை நாட்டின் அலுவல் மொழியாக அறிவிக்க வற்புறுத்தவில்லை. இந்துஸ்தானி, தேவநகரி அல்லது உருது மொழியை தேசிய அலுவல் மொழியாக அறிவிக்கலாம் என்று அவர் பேசியிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.
வரலாற்று உண்மைகளை அரசியல் காரணங்களுக்காக மாற்றக் கூடாது. பள்ளி மாணவர்களுக்கு தவறான வரலாற்றை போதிக்கக் கூடாது.இந்த தவறுகளை நீக்கி திருத்தம் செய்யக் கோரி பள்ளிக் கல்வித் துறை செயலாளர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழும இயக்குனருக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT