ராமநாதபுரம் அருகே விபத்தில் தாய் - சேய் உட்பட 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஆட்டோ மீது கார் மோதியதில், பிரசவம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த தாய்-சேய் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையைச் சேர்ந்தவர் சுமதி(25). இவர், பிரசவத்துக்காக கடந்த 17-ம் தேதி ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், தனது கணவர் சின்ன அடைக்கன்(28), தாயார் காளியம்மாள்(50) ஆகியோருடன் நேற்று ஆட்டோவில் வீட்டுக்குப் புறப்பட்டார்.
மதுரை - ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில், ராமநாதபுரம் நதிப்பாலம் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே ராமேசுவரத்திலிருந்து வந்த கார் மற்றொரு வாகனத்தை முந்த முயன்றது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ உருக்குலைந்தது.
ஆட்டோவில் பயணித்த சுமதி, ஆட்டோ ஓட்டுநர் மலைராஜ் (52) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆண் சிசு, சின்ன அடைக்கன், காளியம்மாள் ஆகியோர் பலத்த காயங்களுடன், ராமநாதபுரத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஆண் சிசு மற்றும் சின்ன அடைக்கன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக உச்சிப்புளி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சென்னை சேலையூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் விக்னேஷ்(34) என்பவரைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
