Published : 20 Feb 2023 07:33 AM
Last Updated : 20 Feb 2023 07:33 AM
கள்ளக்குறிச்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மயானக்கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வீற்றிருக்கும் அம்மன், புற்று மண்ணால் சுயம்புவாக உருவானவள் என தல வரலாறு கூறுகிறது. நான்கு திருக்கரங்களுடன் இடது காலை மடக்கி, வலது காலை தொங்க விட்டபடி பிரம்ம கபாலத்தை மிதித்தவாறு வடக்கு திசை நோக்கி அம்மன் அருள் புரிகிறார்.
இந்த கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் நள்ளிரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இதில்ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதுதவிர ஆண்டுதோறும் மாசிப் பெருவிழா, 13 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு மாசிப் பெருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மயானக் கொள்ளை திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, கருவறையில் உள்ள அம்மனுக்கு நேற்று அதிகாலைசிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. பின்னர் மயான காளியாய் அலங்கரிக்கப்பட்ட உற்சவ அம்மன், சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். கோயிலில் இருந்து ஆக்ரோஷத்துடன் மயானத்தை நோக்கி புறப்பட்டார்.
வழிநெடுகிலும் பக்தர்கள் காய்கள், கனிகள், பழ வகைகள், மலர்கள்,ரூபாய் நோட்டுகள், சில்லரை நாணயங்களை அம்மன் மீது வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பல பக்தர்கள், காளி, சக்தி உள்ளிட்ட வேடங்களை அணிந்து ஊர்வலத்தில் சென்றனர்.
அம்மன் மயானத்தை அடைந்ததும் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை பூசாரிகள் வாரி இறைத்தனர். அவற்றை பக்தர்கள் போட்டி போட்டு எடுத்தனர்.
மயானக் கொள்ளை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வரும் 24-ம் தேதி நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT