

பணிநீக்கம் செய்யப்பட்ட 2 ஆயிரம் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர்கள் மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் விவசாய சங்கத் தலைவர்கள் மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு விவசாயிகள் - தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.செல்வராஜ் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நல சங்கத் தலைவர் கே.ஏ.சுப்பிரமணியம், ஈசன், விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க செயலாளர்கள் ரவீந்திரன், கோவிந்தன், பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக பாரதிய கிஷன் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், டெல்லிபோராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் யுத்வீர் சிங் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் பேசும்போது, டேன்டீ மக்களின் அடிப்படை கோரிக்கைகளை தீர்க்க தொடர்ந்து போராடப் போவதாக தெரிவித்தனர்.
வால்பாறை டேன்டீ, நடுவட்டம் தோட்டங்கள் முழுவதும் மூடப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிர்ணயித்த ரூ.425.50 சம்பளம் நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.