

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. 77 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குப் பதிவுக்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், வாக்காளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி இரண்டாவது நாளாக நேற்றும் நடந்தது.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஒரு வாக்குச்சாவடிக்கு ஒருவர் என்ற நிலையில், மொத்தம் 238 அலுவலர்கள், வீடு, வீடாகச் சென்று ‘பூத் சிலிப்’ வழங்கும் பணியை மேற்கொண்டனர். ‘வாக்காளர்களிடம் மட்டுமே பூத் சிலிப் வழங்க வேண்டும்; அதற்கு ஒப்புகை பெற வேண்டும்’ என மாவட்ட தேர்தல் அலுவலர் எச்.கிருஷ்ணன் உன்னி அறிவுறுத்தியுள்ள நிலையில், அதன்படி ஒப்புகைச் சீட்டு பெற்று வருகின்றனர்.
வாக்காளர்கள் தகவல் சீட்டில் (பூத் சிலிப்) வாக்காளர்கள் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், பாகம் எண், வாக்குச்சாவடி இடம், தேர்தல் நாள், வாக்குப் பதிவு நேரம் போன்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன. பூத் சிலிப்புடன் தேர்தல் ஆணையத்தால் பரிந்து ரைக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு வாக்களிக்கலாம் என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வரும் 24-ம் தேதி வரை ‘பூத் சிலிப்’ வழங்கப் படவுள்ளது.
‘பூத் சிலிப்’ பெற முடியாத அல்லது கிடைக்கப்பெறாத வாக்காளர் களுக்கு, வாக்குப் பதிவு நாளன்று அந்தந்த வாக்குச் சாவடிகளிலேயே அதை வழங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.