Published : 27 May 2017 02:21 PM
Last Updated : 27 May 2017 02:21 PM

மிருகவதை தடை சட்டத்தை மறுபரிசீலனை செய்க: விஜயகாந்த் வலியுறுத்தல்

இறைச்சிக்காக மாடுகளை விற்பது மீதான தடை சட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு 1960-ம் ஆண்டு இயற்றப்பட்ட மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கால்நடைகளை இறைச்சிக்காக விற்பது, வாங்குவது போன்றவற்றுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து, 'மிருகவதைத் தடுப்பு (கால்நடை சந்தை ஒழுங்குமுறை) விதிகள் 2017’ என்ற பெயரால் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் பல மொழி பேசக்கூடிய மக்களும், பல மதத்தை சார்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொறு மதத்தை சார்ந்தவர்களுக்கும் தனித்தனி பண்பாடு, கலாச்சாரம், உணவு முறைகளும் உண்டு. அதை தடுக்கும் வகையில் மத்திய அரசு, மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளின் இறைச்சி உண்ணுவதற்கும், சந்தை விற்பனைக்கும், வாங்குவதற்கும், தடை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கக்கூடிய செயலாகும்.

ஆடு, மாடு, ஒட்டகம், கோழி, மீன், போன்ற இறைச்சிகளை உண்ணுவது பல ஆண்டுகளாக தொன்று தொட்டு மக்களிடையே இருக்கின்ற ஒரு பழக்கமாக இருந்து வருகிறது, இதில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது. மான், முயல், மயில், புலி, யானை, சிங்கம் போன்ற வனவிலங்குகளுக்கு மட்டும் தடை இருக்கிறது, அதைப்போல நாட்டு விலங்குகளுக்கும் தடை விதித்தால் ஒட்டுமொத்தமாக தடைவிதிக்க வேண்டிவரும்.

விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய கறவை, உழவு மாடுகள் பயன்பாட்டிற்கு பிறகு சந்தைகளில் விற்பனை செய்து பயனடைவார்கள். ஆடு, கோழி, மீன் போன்றவைகள் நாள்தோறும் உணவுக்கு, வியாபாரத்திற்கு பயன்படுத்தக்கூடியதாகும். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபொழுது ஆடு, மாடு போன்றவை கோவில்களில் உயிர் பலியிடுவதற்கு தடை என்று ஒரு சட்டம் கொண்டுவந்தார், அதற்கு மக்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பு உண்டானதன் விளைவாக, அந்த சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற்றார் என்பதை நினைவு படுத்துகிறேன்.

மிருகவதை சட்டத்திற்கு பின்னால் TRADITION, TRADE, TASTE இருப்பதால் உடனடித் தடை என்பது மிகப்பெரிய சவாலாகவும், எதிர்ப்புகளையும் கொண்டுவரும் என்பதால் மத்திய அரசு மறுபரிசீலனை செய்து இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப்பெறவேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x