

ஓய்வு பெற்ற அரசு பஸ் ஓட்டுநருக்கு 17 ஆண்டுகளாக வழங்கப்படாத ஓய்வூதிய பலன்களை, போக்குவரத்து கழக அதிகாரிகளை ஒரு வாரம் சிறையில் அடைக்க உத்தரவிட்டதால் ஒரே நாளில் வழங்கப்பட்டது.
போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் 20 ஆண்டுகள் ஓட்டுநராக பணிபுரிந்து, 2000-ல் விருப்ப ஓய்வில் சென்றவர் திருச்சியை சேர்ந்த கலியபெருமாள். இவருக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இதனால் உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தார். அவரது மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், 12 வாரத்தில் ஓய்வூதிய பலன்களை வழங்க 23.2.2015-ல் உத்தரவிட்டது. இருப்பினும் எனக்கு இதுவரை ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் தரப்படவில்லை. எனவே நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாததால் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ரெங்கராஜன், பொது மேலாளர் பாண்டியன், போக்குவரத்து கழக ஊழியர்கள் ஓய்வூதிய அறக்கட்டளை காப்பாட்சியர் சி.ஆறுமுகம் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.ராகுல் வாதிட்டார். இந்த வழக்கு 7 முறை விசாரணைக்கு வந்த போதும் மனுதாரருக்கு பணப் பலன்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு 8-வது முறை விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத போக்குவரத்து அதிகாரிகளுக்கு ஒரு வாரம் சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.
அதிர்ச்சியடைந்த போக்குவரத்து அதிகாரிகள் மறுநாளே கலியபெருமாளு க்கு வழங்க வேண்டிய பணத்தை மொத்தமாக அவரது கணக்கில் வரவு வைத்தனர். இதனை போக்குவரத்து கழக வழக்கறிஞர் நீதிபதியிடம் தெரவித்தார் இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை முடித்து உத்தரவிட்டார்.