Published : 20 Feb 2023 05:48 AM
Last Updated : 20 Feb 2023 05:48 AM

பீர்க்கன்காரணையில் மேம்பாலப் பணிக்காக ஜிஎஸ்டி சாலையில் 30 கடைகளை இடிக்கும் பணி தீவிரம்

பெருங்களத்தூர் மேம்பாலத்தின் ஒரு பக்க பாதை கட்டி முடிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது. மற்றொரு பக்க பாதைக்காக பேருந்து நிறுத்தம், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. படம்: எம்.முத்துகணேஷ்

பீர்க்கன்காரணை

பெருங்களத்தூர் மேம்பால திட்டத்தின் ஒரு பகுதியாக ஜிஎஸ்டி சாலையில், வண்டலூர் மார்க்கமாக பணிகளை மேற்கொள்ள வசதியாக பீர்க்கன்காரணை பகுதியில் 30 கடைகளை இடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன .

தாம்பரம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் பெருங்களத்தூரில் ரயில்வே கேட் எண் 32-க்கு மாற்றாக ரூ.234 கோடியே 37 லட்சத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாக ரயில்வே துறை சார்பில் ரூ.76 கோடி மதிப்பீட்டில் பெருங்களத்தூர் பகுதியை ஜிஎஸ்டி சாலையுடன் இணைக்கும் வகையில் ரயில்வே மேம்பாலப் பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கின. அந்த பணிகள் முடிந்துவிட்டன. கடந்த 2020-ம் ஆண்டு தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன.

இதனிடையே ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு- தாம்பரம் மார்க்கமாக ரூ.37 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வந்த ஒருபகுதி மேம்பாலப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இம்மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

ஒரு வழிப்பாதை திறக்கப்பட்டதால் பெருங்களத்தூரில் ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. இருந்தாலும் காலை மாலை நேரங்கள் மற்றும் விடுமுறை, பண்டிகை நாட்களில் நெரிசல் பிரச்சினை தொடர்கிறது. ஜிஎஸ்டியில் வண்டலுார் மார்க்கமாகவும், பீர்க்கன்காரணை, புதுப்பெருங்களத்தூர் சீனிவாசா நகர் மற்றும் நெடுங்குன்றம் மார்க்கமாகவும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்குத் திறந்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் மேம்பாலப் பணிக்காக பீர்க்கன்காரணை பகுதியில் 30 கடைகளை அகற்ற சம்பந்தப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டிடங்களை இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

அந்த மார்க்கத்தில் பில்லர் அமைக்கும் பணி ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகிறது. கட்டிடம் இடிக்கப்பட்ட பகுதிகளிலும் விரைவில் பணிகள் தொடங்கும். இந்தாண்டு இறுதிக்குள் பணிகளை முடித்து, வண்டலுார் மார்க்க பாதையை பயன்பாட்டுக்குத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x