

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தேர்வுக் குழு பரிந்துரை செய்யும் நபரை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியைச் சேர்ந்த ஆர்.ராம் பிரசாத், சென்னை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் குறைந்துகொண்டே செல்கிறது. இங்கு படித்து பொறி யாளராக வெளிவரும் மாணவர் கள், வேலையில் சேர்வதற்கு பல ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு துறை பேராசிரியர்கள் தகுதி இல்லாதவர்களாக இருப்பதே காரணம். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.
தகுதியற்ற நபர்கள்
ஆனால், பல்கலைக்கழகத் துக்கு சரியான நபரை துணை வேந்தராக நியமிப்பதில் அரசு முனைப்பு காட்டவில்லை. தேர்வுக் குழுவின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்பவே துணைவேந்தர் நியமிக்கப் படுகிறார். தற்போதைய தேர்வுக் குழுவில் தகுதியற்ற நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மதுரை தியாகராஜர் பொறி யியல் கல்லூரி தலைவர் கருமுத்து டி.கண்ணன், அண்ணா பல் கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கான தேர்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப் பட்டுள்ளார். 1978 அண்ணா பல்கலைக்கழக சட்டப்பிரிவு 11 (1 மற்றும் 2)-ன்படி தேர்வுக்குழு உறுப்பினர், பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட எந்தப் பொறுப் பிலும் இருக்கக் கூடாது. இச்சட்ட விதிமுறையை மீறி கரு முத்து டி.கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்காக 3 பேரின் பெயர் களை தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. தேர்வுக் குழுவின் உறுப்பினரே விதிமுறையை மீறி நியமிக்கப்பட்டிருப்பதால், இத் தேர்வுக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும். துணைவேந்தர் நிய மனத்துக்கு தங்கள் பெயரை பரிந்துரை செய்வதற்காக தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு சிலர் பெருமளவு பணம் கொடுத்திருப் பதாக குற்றச்சாட்டு எழுந் துள்ளது.
எனவே, தற்போதைய தேர்வுக் குழு பரிந்துரையின்படி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தடை விதிக்க வேண்டும். தற்போதைய தேர்வுக் குழுவை மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘இவ்வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவு, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்துக்கு எதிரான வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது’’ என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக ஆளுநரின் செயலாளர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், பல்கலைக்கழக பதிவாளர், தேர் வுக்குழு உறுப்பினர் கருமுத்து டி.கண்ணன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தர விட்டனர்.