

விம்கோ நகர் பணிமனையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு விரைவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. சென்னை விமானநிலையம்-விம்கோநகர் வரையும், பரங்கிமலை-சென்ட்ரல் வரையும் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த மெட்ரோ ரயில்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோரயில் பணிமனையில் நள்ளிரவில் வரிசையாக நிறுத்தி தூய்மைப்பணி மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையில், விம்கோ நகரில் மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.200 கோடியில் பிரம்மாண்ட பணிமனை அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது. கரோனா காலத்தில் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, மீண்டும்தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், இந்த பணிமனை கடந்தாண்டு செப்டம்பரில் பயன்பாட்டுக்கு வந்தது. ஆனால், சில தொழில்நுட்ப கோளாறால், நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
10 சர்வீஸ் பாதைகள்
விம்கோ நகர் பணிமனையில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்து, அனைத்து பணிகளையும் நிறைவு செய்து விட்டோம். விரைவில் இந்த பணிமனை பயன்பாட்டுக்கு வரவுள்ளது. பணிமனை உள்ளே மொத்தம் 10 சர்வீஸ் பாதைகளும், ஆய்வு மேற்கொள்ள 3 பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பழுது ஏற்பட்டால், ரயிலை தூக்கி பழுதைசரிசெய்ய ஒரு பிரதான பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரத்துக்கு 4 ரயிலை தூய்மைப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.