

தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சி யில் பங்கேற்ற கமல்ஹாசன், மகா பாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக வும், இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆதிநாத சுந்தரம் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சி யில் கமல்ஹாசன் மகாபாரதம் குறித்து இழிவாக பேசியுள்ளார். இதனால் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதித்துறை நடுவர் செந்தில்குமார், மே 5-ல் கமல்ஹாசன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கமல்ஹாசன் உயர் நீதிமன்ற கிளையில் நேற்று மனுத் தாக்கல் செய்தார். அதில், ‘இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு. இங்கு கருத்து சுதந்திரத்துக்கு உரிமை உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்துக்காக வழக்கு தொடுப்பது அடிப்படை உரிமை மீறலாகும். நான் 50 ஆண்டுகளாக கலைச் சேவை ஆற்றி வருகிறேன். தொலைக்காட்சி நேர்காணலில் நெறியாளரின் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விக்கு என் மனதில் பட்டதை பதிலாக தெரிவித்தேன். யாருடைய மனதையும் புன்படுத்தும் நோக்கம் இல்லை.
மேலும் நீதிமன்றத்தில் இபிகோ 298 படி என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இப்பிரிவு நேரடியாக ஒருவரின் மனதை புன்படுத்தினால் மட்டுமே பொருந்தும். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்ததற்காக இந்தப் பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியாது. கீழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனில் என் மீது என்ன வழக்கு? குற்றச்சாட்டுகள் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. வெறுமனே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று மட்டுமே சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே வள்ளியூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எனக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும், என மனுவில் கமல் கூறியுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.