Last Updated : 29 May, 2017 12:08 PM

 

Published : 29 May 2017 12:08 PM
Last Updated : 29 May 2017 12:08 PM

மாட்டு இறைச்சி விற்பனை தடைக்கு அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு: புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தமாட்டோம் என முதல்வர் அறிவிப்பு

மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை என்ற மத்திய அரசின் சட்டத்தை புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் இன்று (திங்கள்கிழமை) அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பூஜ்ய நேரத்தில், நாடு முழுவதும் பசு, காளை, கன்று, ஒட்டகம் இறைச்சி விற்கப்படுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, திமுக, என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேசினர்.

அன்பழகன் (அதிமுக): மத்திய அரசின் அறிவிப்பு மக்களுக்கு எதிரானது. சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றுவது அவசியம்.

சிவா (திமுக): ஆர்எஸ்எஸ் கருத்தை மக்கள் மீது திணிக்கும் பணியை பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. அரசியல் சட்டத்துக்கு புறம்பானது. இறைச்சிக்கு தடை என்று சர்வாதிகார போக்கை பாஜக மேற்கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

அதைத்தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அசோக் ஆனந்த், செல்வம் ஆகியோரும் மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

வேளாண்துறை அமைச்சர் கமலகண்ணன்:

"யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இதில் மாநில அரசு உறுதியாக செயல்பட வேண்டும். சட்ட ரீதியான பாதுகாப்பு தர வேண்டும். விவசாயிகள், வியாபாரிகள் பீதியில் உள்ளனர். புதுச்சேரி அரசு நமது நிலைப்பாட்டை சட்ட ரீதியாக தெரிவிக்க வேண்டும்" என்றார்.

முதல்வர் நாராயணசாமி உறுதி:

பல்வேறு கட்சியினரும் தங்கள் கருத்துகளை முன்வைத்த நிலையில் முதல்வர் நாராயணசாமி, "மத்திய அரசு இந்திய நாட்டில் உள்ள மக்கள் காளைகள், கன்றுகள், ஒட்டகம் ஆகியவற்றை கொன்று உண்ணக்கூடாது எனத் தடை விதித்துள்ளது. மேலும், கால்நடைகளின் சந்தை விற்பனைக்கும் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை புதுச்சேரி அரசு சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

மத்திய அரசு பல திட்டங்களை மக்கள் ஏற்காவிட்டாலும் திணிக்கிறார்கள். ஒருவர் ஆட்டு இறைச்சி எடுத்துச் சென்றாலும், பசு பாதுகாப்பு இயக்கம் என்ற போர்வையில் படுகொலை செய்வதும் துன்புறுத்துவதும் வடநாட்டில் நடக்கிறது.

உணவு உண்பதை வற்புறுத்த இயலாது. வடகிழக்கு மாநிலங்களில் 95 சதவீதத்தினர் அசைவ உணவையே உண்கின்றனர். நாடு முழுவதும் 40 சதவீத மக்கள் அசைவ உணவு உண்பவர்கள். இதை புறம்தள்ளி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில், பிரெஞ்சு கலாச்சாரத்தில் வந்தோர் அதிகம். புரதச் சத்துக்காக மாட்டு இறைச்சி உண்போர் உண்டு. இந்நிலையில் மத்திய அரசு தன்னிச்சையாக சட்டம் கொண்டுவந்துள்ளது.

இதற்கு, அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரளம், கர்நாடகம், தமிழகம், புதுச்சேரியில் எதிர்ப்பு புறப்பட்டுள்ளது.

மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வந்ததை ஏற்க இயலாது. கர்நாடக, கேரள மாநில முதல்வர்கள் ஏற்பதில்லை என்று கூறியுள்ளார்கள்.

புதுச்சேரி அரசு சார்பில் மக்கள் நலன் கருதி, எம்எல்ஏக்கள் கோரிக்கையை ஏற்று சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம். மக்கள் எண்ணம்தான் எங்கள் எண்ணம். இதுதொடர்பாக மோடிக்கு கடிதம் எழுத உள்ளேன். தேவைப்பட்டால் தனிச் சட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தாமல் இருப்போம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x