

சென்னையில் நிலவும் கடும் வெயில் காரணமாக, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் வரத்து குறைந்ததால் காய்கறி விற்பனை மந்தமாக உள்ளது. அதனால் காய்கறி விலை குறைந்து வருவது வியாபாரிகளை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு, தமிழக பகுதிகளை விட அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் இருந்து தான் அதிக அளவில் காய்கறிகள் வருகின் றன. தற்போது 3 மாநிலங்களிலும் வறட்சி நிலவும் நிலையில், கடந்த இரு வாரங்களாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து, அவற்றின் விலை உயர்ந்தன.
பீன்ஸ் ரூ.110-க்கும், சாம்பார் வெங்காயம் ரூ.85-க்கும், கேரட் ரூ. 65-க்கும், அவரை ரூ.60-க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வரத்து குறைந்ததால், காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் நேற்றைய நிலவரப்படி ரூ.10-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.9-க்கும், ரூ.35-க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் ரூ.25-க்கும், ரூ.50-க்கு விற்கப்பட்ட அவரைக்காய் ரூ.40-க்கும், ரூ.110-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.75-க்கும், ரூ.60-க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.50-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் ரூ.25-க்கும், ரூ.30-க்கு விற்கப்பட்ட புடலங்காய் ரூ.25-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட வெண்டைக்காய் ரூ.15-க்கும், விற்கப்பட்டது.
இது தொடர்பாக கோயம்பேடு சந்தை மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்க செயலர் முத்துக்குமார் கூறியதாவது:
வறட்சி காலத்தில் காய்கறிகள் குறைவாக வரும். விலை அதிகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு ஓரளவுக்கு வருவாயும் வரும். ஆனால் இந்த வாரத்தின் தொடக்கத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பேருந்துகள் இயக்கம் குறைந்து, மக்கள் வரத்தும் குறைந்தது. வேலைநிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருவதால், பொதுமக்கள் யாரும் வெளியில் வர விரும்பவில்லை.
இதனால் இந்த ஒரு வாரமாக மக்கள் வரத்து குறைந்து, காய்கறி விற்பனை மந்தமாக உள்ளது. காய்கறிகள் அழுகிவிடும் என்பதால், விலை குறைத்து விற்க வேண்டியுள்ளது. இதனால் வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்து வருவதுடன், வேதனைக்கு உள்ளாகியும் வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.