மருத்துவப் படிப்பில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு விகிதாச்சார ஒதுக்கீடு தேவை: அன்புமணி

மருத்துவப் படிப்பில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு விகிதாச்சார ஒதுக்கீடு தேவை: அன்புமணி
Updated on
2 min read

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் நலனைப் பாதுகாக்க, அவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மாணவர் சேர்க்கை விதிகளில் உரிய திருத்தங்களை அரசு செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் நலன்களுக்கு எதிராக அமைந்துள்ள நிலையில், அவர்களின் நலன்களை பாதுகாக்க வழிகாட்டியிருக்கிறது குஜராத் அரசின் அறிவிப்பு. குஜராத்தில் மத்திய, மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கைப்படி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு.

மத்திய அரசால் நடத்தப்பட்ட நீட் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் அதன் சொந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதால், அந்தப் பாடத்திட்டத்தை படித்தவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு போதிய இடங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் மத்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கியது போக மீதமுள்ள 3623 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களில் 90% இடங்களை மத்திய பாடத்திட்ட மாணவர்களே கைப்பற்றும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சம். இவர்களில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான பாடப்பிரிவுகளை படித்தவர்கள் 4 லட்சம் பேர்.

மத்தியப் பாடத்திட்டத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 12,000 பேர் மட்டுமே. இவர்களில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான பாடங்களை படித்தவர்கள் 4000 பேர் தான். 4000 பேர் மட்டுமே உள்ள ஒரு பிரிவினர் 3300 இடங்களையும், 4 லட்சம் பேர் கொண்ட பிரிவினர் 330 இடங்களையும் கைப்பற்றுவது என்ன வகையான நீதி? இது சமூக நீதிக்கும், இயற்கை நீதிக்கும் சாவுமணி அடிக்கும் செயல் அல்லவா?

குஜராத் மாநிலத்திலும் இதேபோன்ற நிலை ஏற்படும் என்று பெற்றோர்கள் அச்சம் தெரிவித்தததை அடுத்து, அம்மாநில மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் நடைபெற்றாலும், கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டது போன்று மத்திய, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்க விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுமென்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு வரை குஜராத் பொது நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. அந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்றவர்களில் 75% மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் என்றால் அவர்களுக்கு 75% இடங்கள் ஒதுக்கப்படும். மத்தியப் பாடத்திட்டத்தில் 25% மாணவர்கள் படித்திருந்தால் அவர்களுக்கு அதே அளவிலான இடங்கள் ஒதுக்கப்படும். அதே முறை இந்த ஆண்டும் கடைபிடிக்கப்படுவதன் மூலம் அம்மாநிலப்பாடத்திட்ட மாணவர்கள் நலன் காக்கப்படும்.

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் நலனை பாதுகாக்க குஜராத் மாதிரியை பின்பற்றலாம். தமிழகத்திலிருந்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 80,000 என்றும், அதில் மத்திய, மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் எண்ணிக்கை முறையே 4000, 76,000 என்று வைத்துக் கொண்டால் மத்தியப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 5% இடங்களும், மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு 95% இடங்களையும் ஒதுக்கீடு செய்யலாம். இதன்மூலம் சமூக நீதியை பாதுகாக்கவும் முடியும். இதில் கிடைக்கும் 5% இடங்கள் தவிர அனைத்திந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் 15% இடங்களும் மத்தியப் பாடத்திட்ட மாணவர்களுக்கே முழுமையாக கிடைக்கும் என்பதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

கடந்த மாதம் 15-ம் தேதி தமிழகத்திற்கு வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசு விரும்பினால், கிராமப்புற மாணவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று அறிவித்தார்.

அதன்படி பார்த்தால் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களின் நலனைப் பாதுகாக்க அவர்களுக்கென தனி ஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு முட்டுக்கட்டை போடாது. எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் நலனைப் பாதுகாக்க, அவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மாணவர் சேர்க்கை விதிகளில் உரிய திருத்தங்களை அரசு செய்ய வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in