

74 வயது முதியவர் மீது போடப்பட் டுள்ள கஞ்சா வழக்கின் உண்மைத் தன்மை குறித்து நேர்மையான போலீஸ் அதிகாரியைக் கொண்டு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் எழில் நகரைச் சேர்ந்தவர் வேதக்கண் நாடார் (74). இவரது வீட்டில் இருந்து 2 கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற் றப்பட்டதாக கூறி இவரை கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஆர்.கே.நகர் போலீஸார் கைது செய்தனர். இதை யடுத்து ஜாமீன் கேட்டு சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வேதக்கண் நாடார் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நாங்கள் குடியிருக்கும் எழில் நகர் பகுதி 250 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக 4 ஆயிரம் குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகிறோம். நான் எழில்நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவராகவும் உள்ளேன். இந்த நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு எங்களுக்கு வழங்கியது. ஆனால், முறையான உத்தரவை இதுவரை பிறப்பிக்கவில்லை. இது தொடர்பாக எங்களது சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்து, சாதக மான உத்தரவைப் பெற்றுள்ளோம்.
இந்நிலையில், ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர் தனது அடியாட் கள் மூலம் ரூ.1,000 கோடி மதிப் புள்ள இந்த நிலத்தை அபகரிக்க சட்டவிரோதமாக முயன்று வரு கிறார். இதற்காக குறுக்கு வழியில் எழில்நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தை கைப்பற்ற முயன்று வருகின்றனர். அதை தட்டிக்கேட்ட என் மீதும் சங்க நிர்வாகிகள் மீதும் பொய் வழக்கு போடுவதாக மிரட்டிச் சென்றனர்.
ஆளுங்கட்சி எம்எல்ஏ தூண்டு தலின்பேரில் என் மீது ஆர்.கே.நகர் போலீஸார் போலியாக கஞ்சா வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 முறை ஜாமீன் கோரி விண்ணப் பித்தும் 74 வயது முதியவர் என்றும் பாராமல் வேண்டுமென்றே இழுத் தடித்து வருகின்றனர். எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரி யிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி கே.அய்யப்பன், இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தர விட்டார். ஆனால், போலீஸார் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவர் அபகரிக்க முயல்வதாகவும், இதற்கு மனுதாரர் இடையூறாக இருப்பதால் அவர் மீது போலியாக கஞ்சா வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது. இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய போலீஸா ருக்கு 3 முறை அவகாசம் கொடுத் தும் இதுவரை தாக்கல் செய்ய வில்லை. இந்த வழக்கின் உண்மைத்தன்மை என்ன என்பது தெரியாமல் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. அதேநேரம், மனுதாரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தீவிரமானதாக இருப் பதால் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை நியமித்து, கஞ்சா வழக்கின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணைய ருக்கு உத்தரவிடுகிறேன்’’ எனக் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதற்கிடையே, சிறப்பு நீதி மன்றம் 3 முறை உத்தரவிட்டும் போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாததை சுட்டிக் காட்டி, ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதக்கண் சார்பில் ஜாமீன் தாக்கல் செய்யப் பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 74 வயது முதியவரான வேதக்கண் நாடாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.