

ஜோலார்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரியஒளி விழும் அபூர்வ காட்சியை கண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி அம்மையப்பன் பகுதியில் பழமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகளும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றன.
சிவராத்திரியையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு 12.20 மணிக்கு 2-ம் கால பூஜைகள் தொடங்கின. இந்த பூஜை நேற்று அதிகாலை 3.20 மணி வரை நடைபெற்றது. இந்த பூஜையில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காலை 6.24 மணியளவில் 4-ம் காலை பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் 4-ம் கால பூஜைகள் முடியும்போது காசி விஸ்வநாதர் (சிவலிங்கம்) மீது சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ சம்பவம் நிகழ்வது வழக்கம். அதன்படி, நேற்று காலை 4-ம் கால பூஜை முடியும் போது சூரிய ஒளி காசி விஸ்வநாதர் திருமேனி மீது விழுந்தது. காலை 7.25 மணி முதல் 7.35 மணி வரை 10 நிமிடங்கள் சூரிய ஒளி சிவலிங்கம் மீது படர்ந்தது. இந்த அபூர்வ காட்சியை கண்ட பக்தர்கள் பரவசமடைந்தனர்.