Published : 12 May 2017 07:52 AM
Last Updated : 12 May 2017 07:52 AM

முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: எந்த நிறுவனமும் வேறு மாநிலத்துக்கு செல்லவில்லை - தமிழக அரசு விளக்கம்

தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் நிறுவனங்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்றுவிட்டதாக வெளியான செய்திகள் தவறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு போதுமான ஒத்துழைப்பு அளிக்காததால் தென்கொரியாவைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான கியா மோட்டார்ஸ், ஆந்திர மாநிலத்துக்குச் சென்றுவிட்டதாக முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன. சென்னையைச் சேர்ந்த ஒருவரது முகநூல் பக்கத்தில், நிலம் ஒதுக்குவதில் முறைகேடு நடந்ததால் கியா மோட்டார்ஸ் நிறுவனம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டிருந்தது. இவை அனைத்தும் அரசுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் வேண்டுமென்றே பரப்பப்பட்டுள்ளன.

கடந்த 2016 ஜூனில் கியா மோட்டார்ஸ் இந்தியாவில் முதலீடு செய்யவிருப்பதாக செய்திகள் வந்தன. தமிழக அரசு உடனடி யாக கியா மோட்டார்ஸ் பங்கு தாரரான ஹூண்டாய் நிறுவனத் துடன் ஆலோசனை நடத்தியது. தமிழகத்தில் தொழில் தொடங் குமாறு கியா மோட்டார்ஸ் தலை வருக்கு தமிழக தொழில் துறை செயலாளர் கடிதம் எழுதினார்.

அதற்கு அவர் அனுப்பிய பதிலில், ‘தமிழக அரசின் ஆதரவில் ஹூண்டாய் நிறுவனம் தங்களது 2 தொழில் திட்டங்களை அமைத்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தனது தொழில் திட்டங்களை நிறுவியுள்ள இடங்களில் கியா மோட்டார்ஸ் தொழில் தொடங்கக் கூடாது என்பது எங்களது பங்குதாரர்களின் முடிவு. எங்களது நிறுவனத்தின் வணிக தேவை மற்றும் இதர காரணங்களால் தமிழகத்தில் புதிய தொழில் திட்டத்தை தொடங்க முடியவில்லை’ என தெரிவித்திருந்தார். தமிழக அரசின் அழைப்பை ஏற்க முடியாததற்கு தனது கடிதத்தில் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.

கியா மோட்டார்ஸ் பங்குதாரரான ஹூண்டாய் நிறுவனம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழில் பூங்காவில் மேலும் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாக தெரிவித்துள்ளது. இது தமிழக அரசின் முயற்சிகளுக்கு கிடைத்த நற்சான்றாகும்.

போர்டு நிறுவனம் தமிழகத்தில் இதுவரை ரூ.4,500 கோடி முதலீடு செய்து 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கியுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 60 சதவீத கார் விற்பனை வட மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ளது. சென்னையில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை அங்கு கொண்டு செல்ல சரக்கு வாகனப் போக்குவரத்து செலவு ஆண்டுக்கு ரூ.70 கோடி ஆகிறது. எனவே, போர்டு நிறுவனம் குஜராத்தில் புதிய திட்டத்தை தொடங்கும் நிலை ஏற்பட்டது.

தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல் இருப்பதால்தான் போர்டு நிறுவனம் சோழிங்கநல்லூர் எல்காட் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார பூங்காவில் ரூ.1,300 கோடியில் ஆராய்ச்சி மையத்துக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்காக எல்காட் நிறுவனம் 28 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது.

எனவே, தமிழகத்துக்கு புதிய முதலீடுகள் வருவதில்லை என்ற செய்திகள் தவறானது. பிரான்ஸ் நாட்டின் பிஎஸ்ஏ பிஜோட் நிறுவனம் காஞ்சிபுரம், ஓசூர் ஆகிய இடங்களில் ரூ.3 ஆயிரம் கோடியில் 3 தொழில் திட்டங்களை தொடங்க முன்வந்துள்ளது.

ஹூண்டாய் (விரிவாக்கம்), யமஹா மியூசிக்கல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், வேதாந்தா, ஐடிசி (விரிவாக்கம்), சியட் டயர்ஸ், ப்ரூடன்பெர்க் ஆகிய நிறுவனங்கள் மூலம் விரைவில் ரூ.15 ஆயிரம் கோடிக்கான முதலீடுகள் தமிழகத்துக்கு வரவுள்ளன. இதனால் 6,500 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகலாம்.

முதலீட்டாளர்கள் விரும்பி வரும் மாநிலமாக தமிழகம் இருப்பதையே இது காட்டுகிறது. தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் மேம்பாட்டுக்காக தமிழக அரசு தொடர்ந்து சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது.

இவ்வாறு தமிழக அரசின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x