வன்னியருக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டுக்குள் வழங்க நடவடிக்கை - முதல்வர் ஸ்டாலினிடம் அன்புமணி வேண்டுகோள்

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  நேற்று சந்தித்தார். உடன், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்தார். உடன், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ., முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு.
Updated on
2 min read

சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை இந்த கல்வி ஆண்டுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி எம்.பி.,கவுரவ தலைவர் ஜி.கே.மணி, இணை பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு, எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ ஆகியோர் நேற்று சந்தித்தனர். நீர்வளத் துறைஅமைச்சர் துரைமுருகன் அப்போதுஉடன் இருந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது:

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், சீர்மரபினருக்கு 2.5 சதவீதம், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 7 சதவீதம் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச்சில் தடை செய்தது. வன்னியர் உள் இடஒதுக்கீடு தொடர்பாக இந்த ஆண்டு ஜனவரியில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஏற்ப, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

தரவுகளை சேகரித்து...: அதன்படி, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 3 மாதத்தில் 20 சதவீதஇட ஒதுக்கீடு தொடர்பான தரவுகளை சேகரித்து தமிழக அரசுக்குபரிந்துரையாக வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது. அதை விரைவுபடுத்தி, இந்த கல்வி ஆண்டுக்குள் வன்னியர் உள் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என முதல்வரை சந்தித்து வலியுறுத்தினோம்.

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் தலித் மற்றும் வன்னியர் சமூகத்தினர் 40 சதவீதம் உள்ளனர். வன்னியர் தனி இடஒதுக்கீட்டால் பிற சமூகங்களுக்கு பாதிப்பு கிடையாது. இது சீர்மரபினர் உட்பட யாருக்கும் எதிரானது கிடையாது.

தருமபுரி காவிரி உபரிநீர் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு காவிரி நீரில் 500 டிஎம்சி கடலில் வீணாக கலந்துள்ளது. காவிரி நீரில் 3 டிஎம்சியை தருமபுரி மாவட்ட ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும். கொள்ளிடம் உபரிநீரை அரியலூர் மாவட்ட ஏரி, குளங்களில் நிரப்பும் வகையில் அரியலூர் சோழர் பாசன திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரியுள்ளோம்.

போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவலர்களுடன் முதல்வர் மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.

வன்னியர் உட்பட அனைத்து சாதிகளுக்கும் மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. சாதிவாரியாக அனைத்து சமூகத்தினரும் அரசு பணிகளில் எத்தனை சதவீதத்தினர் உள்ளனர் என்ற தரவுகள் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு கிடைக்காது. ஆனால் தமிழக அரசு நினைத்தால் 2 அல்லது 3 நாளில் அந்த தரவுகளை எடுத்துவிடலாம்.

வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு விழா நிகழ்ச்சி நடத்துவது குறித்து காவல் துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in