Published : 19 Feb 2023 07:46 AM
Last Updated : 19 Feb 2023 07:46 AM
சென்னை: மோசடி பத்திரப்பதிவுகளை தடுக்கும் வகையில், நாட்டிலேயே முதன்முறையாக மாவட்ட பதிவாளர்களுக்கு பிரத்யேக அதிகாரம் வழங்கி தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது என உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
சென்னை சோழிங்கநல்லூர் அருகே ஒக்கியம் துரைப்பாக்கத்தில் சலபதி என்பவருக்கு சொந்தமான 2 ஆயிரத்து 400 சதுரஅடி வீட்டுமனை உள்ளது. கடந்த 2017 ஜனவரியில் அவர் இறந்துவிட்ட நிலையில், 7 மாதங்கள் கழித்துபோலியாக பொது அதிகார பத்திரம்தயாரித்து, அந்த நிலத்தை சிலர்மோசடியாக விற்பனை செய்துள் ளனர்.
இந்த விவகாரம், சலபதியின் வாரிசுகளுக்குத் தெரியவரவே, இதுதொடர்பாக சென்னை தெற்குமாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்தனர். இதற்கிடையே போலி பத்திரப்பதிவு குறித்து புகார் வந்தால், அதைவிசாரித்து, அந்த பத்திரப்பதிவு போலியானது எனக் கண்டறியப்பட்டால் அதை மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யும் வகையில் தமிழக அரசு, மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கி சட்ட திருத்தம் கொண்டு வந்தது.
கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் அமலுக்கு வந்த இந்தசட்டத் திருத்தத்தின்படி, போலிபத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி சலபதியின் வாரிசுகள் மீண்டும் புகார் அளித்தனர். ஆனால்பதிவுத்துறை அதிகாரிகள் எந்தநடவடிக்கையும் எடுக்காததால்,இதுதொடர்பாக சலபதியின் மகன்சுதாகரராவ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் முதலில் அளித்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கப்பட்டு விட்டதாகவும், தமிழக அரசு கொண்டு வந்தசட்ட திருத்தத்துக்குப் பிறகு இரண்டாவதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய காலத்தில் முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பி்ல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து சொத்துகள் எப்படி மோசடியாக அபகரிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த வழக்குஒரு உதாரணம் எனக் குறிப்பிட்ட நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், இதுபோன்ற செயல்களை தடுக்கவே உயர் நீதிமன்ற யோசனைப்படி, நாட்டிலேயே முதன்முறையாக போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கி தமிழகஅரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது. இது பாராட்டுக்குரியது, என கருத்து தெரிவித்தார்.
மேலும், மனுதாரரின் புகார் தொடர்பாக மாவட்ட பதிவாளர் 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT