Published : 19 Feb 2023 07:40 AM
Last Updated : 19 Feb 2023 07:40 AM
சென்னை: தமிழக மீனவரை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகேயுள்ள கோவிந்தபாடியைச் சேர்ந்த மீனவர் ராஜா, கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததுடன், ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
இந்நிலையில், கூடுதல் நிவாரணம் வழங்குமாறு அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் ராஜாகுடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் இறந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழக மீனவர் ராஜாவைசுட்டுக்கொன்ற கர்நாடக வனத் துறையின் செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது. அவரது உயிரிழப்புக்குக் காரணமான கர்நாடக வனத் துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும். உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தமிழக மீனவரை சுட்டுக்கொன்ற கர்நாடகா வனத் துறையினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, அம்மாநில அரசுக்கு தமிழகஅரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இனியும் இதுபோன்ற சம்பவம்நடைபெறாமல் தடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: துப்பாக்கிச் சூடு நடத்திய கர்நாடக வனத் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். உயிரிழந்த ராஜா குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குமாறு கர்நாடக அரசை, தமிழக அரசு நிர்பந்திக்க வேண்டும். தமிழக முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம் அளித்திருப்பது ஆறுதல் அளித் தாலும், கூடுதல் இழப்பீடும், அவரது குடும்பத்தினருக்கு அரசு வேலையும் வழங்க முதல்வர் முன்வர வேண்டும்.
தவாக தலைவர் தி.வேல்முருகன்: வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க, மாநில எல்லைகளில் தமிழ்நாடு வனத் துறையினரின் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண் டும்.
வி.கே.சசிகலா: இந்த சம்ப வத்தில் தமிழக அரசு மெத்தனப் போக்கைக் கடைபிடிக்காமல் உரிய விசாரணை மேற்கொண்டு, மீனவர் ராஜா உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT