Published : 19 Feb 2023 07:29 AM
Last Updated : 19 Feb 2023 07:29 AM

தமிழக மீனவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு - பதற்றத்தைத் தவிர்க்க கர்நாடக எல்லையில் போலீஸ் பாதுகாப்பு

சேலம்: சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கர்நாடக வனத் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக மீனவரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கோவிந்தப்பாடி, ஏமனூரைச் சேர்ந்த மீனவர்கள் ராஜா (40), செட்டிப்பட்டியைச் சேர்ந்த ரவி (40),இளையபெருமாள் (40) உள்ளிட்ட 4 பேர் கடந்த 14-ம் தேதி 2 பரிசல்களில் பாலாறு வழியாகச் சென்றுகர்நாடக வனப்பகுதியில் மான்வேட்டையில் ஈடுபட்டதாக புகார் கூறப்படுகிறது. இதைக் கண்ட கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ராஜா குண்டடிபட்டு உயிரிழந்தார். மற்ற 3 பேரும் தப்பி ஊர் திரும்பினர்.

நேற்று முன்தினம் அடிப்பாலாற்றில் மிதந்த ராஜாவின் உடல் மீட்கப்பட்டது. பின்னர், பிரேதப்பரிசோதனைக்காக ராஜாவின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ராஜாவுக்கு பவுனா (35) என்ற மனைவியும், ஒரு மகள், 2 மகன்களும் உள்ளனர்.

போக்குவரத்து நிறுத்தம்: துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து தமிழக - கர்நாடக எல்லையில் ஏற்பட்ட பதற்றமான சூழலை தடுக்கும் விதமாக, இருமாநில போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரு மாநிலங்கள் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் எஸ்.பி. சிவக்குமார் தலைமையிலான போலீஸார் தமிழக எல்லையில் உள்ள கிராமங்களில் முகாமிட்டுள்ளனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் ராஜாவின் உறவினர்கள் நேற்று திரண்டிருந்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ராஜாவை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறை மீது வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திரண்டிருந்த அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். பின்னர், பிரேதப் பரிசோதனை முடிந்து நேற்று இரவு ராஜாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

அரசு மருத்துவர் கோகுலரமணன் தலைமையிலான குழுவினர் ராஜாவின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர். இந்த நிகழ்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

பக்தர்கள் பாதிப்பு: இதனிடையே, மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள், கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கு செல்வது வழக்கம்.மீனவர் கொலை சம்பவத்தால், பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் மாதேஸ்வரன் மலைக்கு செல்வது தடைபட்டுள்ளது. தமிழக - கர்நாடக எல்லையான பாலாறு சோதனைச் சாவடியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x