தருமபுரி உணவகங்களில் ஆய்வு விதிமீறிய 10 கடைகளுக்கு அபராதம்

தருமபுரி உணவகங்களில் ஆய்வு விதிமீறிய 10 கடைகளுக்கு அபராதம்
Updated on
1 min read

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உணவுப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் அரசு விதிகளை பின்பற்றி உரிய தரத்தில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, தருமபுரியில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி, ஆட்சியர் அலுவலக பகுதி, இலக்கியம்பட்டி, செந்தில் நகர், நேதாஜி புறவழிச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா தலைமையிலான குழுவினர் நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

ஆய்வின்போது, சில கடைகளில் குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து பராமரிக்கப்பட்ட இறைச்சி கெட்டிருப்பது தெரிய வந்தது. எனவே, அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். உணவகம் ஒன்றில் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் இருப்பதை அறிந்து 4 லிட்டர் எண்ணெய்யை பறிமுதல் செய்து அழித்தனர். செயற்கை நிறமேற்றிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள 2 உணவகங்களுக்கு மேம்பாட்டு அறிக்கை (நோட்டீஸ்) அளிக்கப்பட்டது. இவ்வாறு விதிமீறல்களில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.ஆய்வின் போது, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன், கந்தசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in