

தருமபுரி: தருமபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள ரயில் பாதையில் விபரீதம் உணராமல் விளையாடியபடி நடந்து செல்லும் மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு பாடப் பிரிவுகளுக்கான இளநிலை, முதுநிலை பட்ட வகுப்புகள், ஆய்வு பட்ட வகுப்புகள் செயல்படுகின்றன. கல்லூரியில் 3,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயில்கின்றனர். சுமார் 40 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த கல்லூரி வளாகத்தில் வகுப்பறை கட்டிடங்களுக்கு பின்பகுதியில் விளையாட்டு மைதானமும், அதையொட்டி சேலம் - பெங்களூரு ரயில் பாதையும் அமைந்துள்ளது.
கல்லூரியின் பின்பகுதியில் முறையான சுற்றுச் சுவர் வசதி இல்லாத நிலையில் தொடர் பில்லாதவர்கள் வளாகத்தில் நுழையும் நிலை இருந்து வந்தது. அதேபோல, மாணவ, மாணவியர் சிலர் விளையாட்டு மைதானத்தை ஒட்டியுள்ள ரயில் பாதைக்கு அவ்வப்போது செல்லும் நிலையும் இருந்தது.
எனவே, கல்லூரி மாணவ, மாணவியரின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பே கல்லூரியின் பின்பகுதியிலும் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டது. இருப்பினும், தற்போதும் ஒருசில மாணவர்கள் கல்லூரிக்குள் வராமலே கல்லூரியின் பின்புறம் அமைந்துள்ள ரயில் பாதையில் நடமாடுகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியது: தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்களும், அவர்களது நண்பர்களும் அவ்வப்போது குழுக்களாக இணைந்து கல்லூரியின் பின்புறமுள்ள ரயில் பாதையில் நடமாடுகின்றனர். இங்கு, இரு மார்க்க ரயில்களும் ஒற்றை வழித்தடத்திலேயே இயக்கப்படுகின்றன.
எனவே, மாணவர்கள் நடந்து செல்லும்போது பின்புறமிருந்தும் ரயில்கள் வர வாய்ப்புள்ளது. மாணவர்கள் ஒருவரையொருவர் கிண்டல் செய்தபடியும், போன் மூலம் செல்பி எடுத்தபடியும் நீண்ட தூரத்துக்கு ரயில் பாதையிலேயே நடந்து செல்கின்றனர். சில நேரங்களில் தண்டவாளத்திலேயே அமர்ந்து அரட்டையில் ஈடுபடுகின்றனர்.
இவையனைத்தும் விபரீதத்தில் முடிந்துவிட வாய்ப்புள்ளது. எனவே, கல்லூரி நிர்வாகம் மூலம் அங்கு பயிலும் மாணவர்களுக்கு பொது சுற்றறிக்கை மூலம் ‘கவுன்சலிங்’ வழங்க வேண்டும். மேலும், சீரான இடைவெளியில் குறிப்பிட்ட பகுதியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.