

சென்னை: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் நகைகளை திருடிச் சென்றவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை மேற்கு மாம்பலம் ராஜு தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கட சுப்பிரமணியன். இவரது மனைவி பத்மாவதி (62). மத்திய அரசின் இஎஸ்ஐ அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு மாம்பலம் கணபதி தெருவிலும் ஒரு வீடு உள்ளது.
அந்த வீட்டின் பிளம்பிங் வேலைக்காக ஆட்களை வரச்சொல்லி இருப்பதாகக் கூறிவிட்டு நேற்று முன்தினம் மாலை வெங்கட சுப்பிரமணியன் வெளியே சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வீட்டுக்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார். பிளம்பிங் வேலைக்கு வந்தவர் எனக் கருதி, பத்மாவதிஅவரை வீட்டுக்குள் அனுமதித்துள்ளார்.
வீட்டுக்குள் வந்த இளைஞர், படுக்கை அறை கதவு பழுதடைந்து இருப்பதாகவும், பழுது பார்க்கும் கருவியை எடுத்து வருவதாகவும் கூறிவிட்டு, வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து பத்மாவதி படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அசோக் நகர் போலீஸில் வெங்கட சுப்பிரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில், பிளம்பர்போல நடித்து நகையை திருடிச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.