சென்னை மாநகராட்சியில் 18 சாலைகள் குப்பையில்லா பகுதியாக பராமரிப்பு

சென்னை மாநகராட்சியில் 18 சாலைகள் குப்பையில்லா பகுதியாக பராமரிப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் 5 ஆயிரத்து 200 டன் திடக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. திடக்கழிவு மேலாண்மையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக, மாநகராட்சி சார்பில் `குப்பையில்லா பகுதிகள்' என்ற திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அங்கு மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிய வகை குப்பைத் தொட்டிகளை அமைத்தல், சிறிய குப்பைத் தொட்டியுடன் கூடிய மிதி வண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை ரோந்துப் பணியில் ஈடுபடுதல், சாலைகளில் குப்பை கொட்டுவோர் மீது அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த 66 கி.மீ. நீளமுடைய 18 சாலைகளில், 196 பேருந்து நிறுத்தங்கள் குப்பையின்றி தூய்மையுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 270 தூய்மைப் பணியாளர்கள் காலை, மாலை நேரங்களில் தூய்மைப்பணி மேற்கொள்கின்றனர். மேலும்,222 குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 52 வாகனங்கள் மூலம் குப்பை அகற்றப்படுகிறது.

இந்நிலையில், குப்பையில்லா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், சாலைகளில் குப்பை கொட்டிய தனி நபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, ரூ.39 ஆயிரம் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in