‘கலாம் அறக்கட்டளை சார்பில் 150 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படும்’

கல்தான் இஸ்மாயில்
கல்தான் இஸ்மாயில்
Updated on
1 min read

மாமல்லபுரம்: ராமேசுவரத்தில் இயங்கும் அப்துல் கலாம் அறக்கட்டளை, மார்டின் அறக்கட்டளை, பேஸ் ஜோன் இந்தியா அறக்கட்டளை இணைந்து, இந்தியாவில் 5 ஆயிரம் பள்ளி மாணவர்கள் கைவண்ணத்தில் உருவாக்கிய 150 செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டை இன்று காலை 7.30 மணி முதல் 7.45 மணி வரை மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் விண்ணுக்கு செலுத்து கின்றனர்.

இந்நிலையில், இதன் அறிமுக விழா மாமல்லபுரம் இசிஆர் சாலையில் உள்ள டிடிடிசி ஓசோன் வியூவில் நடந்தது. விழாவுக்கு, மார்டின் அறக்கட்டளை நிர்வாகியும், தமிழ்நாடு கல்வி கொள்கை குழுவின் உறுப்பினருமான கல்தான் இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அண்ணன் பேரன்கள் ஷேக் சலீம், ஷேக் தாவூத்,பேஸ் ஜோன் இந்தியா அறக்கட்டளையின் நிர்வாகி டாக்டர் ஆனந்த மோகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ விஞ்ஞானி கோகுல்கலந்து கொண்டார். அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ராக்கெட்டின் மாதிரி படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

மேலும், கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பில் மாணவ - மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் ப்ரோட்டோ டைப் அதிவேக ஈணுலை ரியாக்டர், பாவினி திட்ட முதன்மை பயன்பாடு, மின்சார உலை, சோடியம் குறீயிட்டு வேக உலை குறித்து கண்காட்சி நடத்தப்பட்டது.

அப்போது, தமிழ்நாடு கல்வி கொள்கை குழுவின் உறுப்பினர் சுல்தான் இஸ்மாயில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குழந்தைகளின் கனவை செயல் முறையில் கொண்டு வந்து பெரிய கனவு காணும் வகையில் ஒரு ராக்கெட்டை தயார் செய்து, 150 செயற்கைக்கோள்களை பொருத்தி விண்ணில் செலுத்துவது மிகவும் பெருமைக்குரியது என்றார். நிகழ்ச்சியில், மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், மாணவர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in