Published : 19 Feb 2023 04:13 AM
Last Updated : 19 Feb 2023 04:13 AM
காஞ்சிபுரம்: பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ நடத்த உள்ள போராட்டம் தொடர்பான ஆயத்த மாநாடு நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் அண்ணா அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெ.லெனின் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவரும் மாநில ஒருங்கிணைப்பாளருமான கு.வெங்கடேசன், செய்தி தொடர்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
இந்த மாநாடு குறித்து கு.வெங்கடேசன் கூறியது: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வாதார கோரிக்கைகளுக்காக போராடி வருகிறது. தற்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்துப் பேச வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், சத்துணவு,அங்கன்வாடிப் பணியாளர் களை காலமுறை ஊதியத்துக்குள் கொண்டு வர வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை, சரண்டர், உயர்கல்வி ஊக்க ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
எங்களின் அமைப்பின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாவிட்டால் வரும் மார்ச் 5-ம் தேதி மாவட்ட அளவிலான உண்ணாவிரதப் போராட்டமும், வரும் 24-ம் தேதி மனித சங்கிலி போராட்டமும் நடைபெறும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT