துணைக்கோள் நகரம் உருவாக்க திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தகவல்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் புதிய துணைக்கோள் நகரங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 3 நாட்கள் நடைபெறவுள்ள ‘பிராப்பர்ட்டி எக்ஸ்போ’ எனும் ரியல் எஸ்டேட் கண்காட்சி நேற்று தொடங்கியது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாடு ரியல் எஸ்டேட் தொலைநோக்கு திட்டம் - 2030-ஐ’ வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் அபூர்வா, பாரத ஸ்டேட்வங்கியின் முதன்மை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நகர மயமாதலில் தமிழகம் நாட்டிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. தொழில் துறையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. விண்ணப்பங்களுக்கு விரைவான அனுமதிகளை வழங்குவதில் அரசு உறுதி பூண்டிருக்கிறது.

புதிய துணைக் கோள் நகரங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். வெளிவட்டச் சாலையின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனால்ரியல் எஸ்டேட் துறையில் மகத்தான வாய்ப்பு உருவாகும். சென்னை மாநகராட்சி, பெருநகர வளர்ச்சிக் குழுமம், நகர் ஊரமைப்பு இயக்ககம், நகராட்சி நிர்வாக இயக்ககம்,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் மற்றும் தடையின்மைச் சான்று வழங்கக்கூடிய துறைகள் ஆகியவற்றை ஒற்றைச் சாளர முறையில் இணைத்து, தமிழகத்தில் எந்தப் பகுதியாக இருந்தாலும், திட்ட அனுமதிக்கான ஒப்புதலை எளிதில் பெற வழிவகுக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் ஆன்லைன் மூலம் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in