அமைச்சர் காமராஜை உடனடியாக பதவி நீக்கி கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்

அமைச்சர் காமராஜை உடனடியாக பதவி நீக்கி கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்
Updated on
2 min read

மோசடிப் புகாருக்கு ஆளான அமைச்சர் காமராஜை கைது செய்வதுடன், அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உதவி கேட்டு வந்தவரிடம் ரூ.30 லட்சம் வாங்கி மோசடி செய்தது தொடர்பான வழக்கில் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? என்று கேட்டு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இரண்டாவது முறையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்ட பிறகும் அமைச்சர் மீது எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்ற ஒப்பந்ததாரர் ஒரு வீட்டை காலி செய்து தருவதற்காக, அதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான காமராஜை அணுகி ரூ.30 லட்சம் பணம் கொடுத்திருக்கிறார். ஆனால், ஒப்புக்கொண்டவாறு குமாருக்கு வீட்டை காலி செய்து தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை.

ஒரு கட்டத்தில் தமது பணத்தை திருப்பிக் கேட்ட போது குமாருக்கு அமைச்சர் காமராஜ் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமைச்சர் காமராஜ் மீது காவல்துறையில் குமார் புகார் அளித்தும் அதன்மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதையடுத்து அமைச்சர் காமராஜ் மீது நடவடிக்கை தமிழகக் காவல்துறைக்கு ஆணையிடக் கோரி, குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி தமிழக காவல்துறைக்கு கடந்த மாதம் 28-ம் தேதி ஆணையிட்டது.

அதன் மீது தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அவ்வழக்கை இன்று மீண்டும் விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ''அமைச்சர்களாக இருப்பவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மதித்து நடக்க வேண்டும். அமைச்சர் காமராஜ் மீதான குற்றச்சாட்டுக்கு முதற்கட்ட ஆதாரம் இருப்பதால் அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்'' என்று உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் ஆணையிட்டிருக்கிறது. அமைச்சர் ஒருவர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்யும்படி உச்ச நீதிமன்றம் மீண்டும், மீண்டும் ஆணையிடுவது தமிழக அரசுக்கு மிகப்பெரிய இழுக்கு ஆகும்.

அமைச்சர் காமராஜ் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. காமராஜ் மீதான குற்றச்சாட்டை தமிழக அரசும் மறுக்கவில்லை. மாறாக, காமராஜ் நேரடியாக பணம் வாங்கவில்லை. அவரது முன்னிலையில் அவருடன் இருந்த இன்னொருவர் தான் பணம் வாங்கியதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது.

அமைச்சராக இருப்பவர்கள் கையூட்டு வாங்குவதே தவறு; அதுவும் சட்டவிரோத செயலை செய்வதற்கு கையூட்டு வாங்குவது மிகப்பெரிய தவறு ஆகும். இத்தகைய தவறு செய்த அமைச்சர் மீது உச்ச நீதிமன்ற ஆணைக்கு பிறகும் வழக்குப் பதிவு செய்யாமல் கால தாழ்த்துவதும், அவரை அமைச்சரவையில் அனைத்து மரியாதைகளுடனும் வைத்து அழகு பார்ப்பதும் சகித்துக் கொள்ள முடியாத ஜனநாயகப் படுகொலையும், அற மீறலும் ஆகும்.

ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் பல கோடி செலவழித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததன் அடிப்படையில் அவரது வீட்டில் வருமானவரித்துறையினர் ஆய்வு நடத்தினர். அதில் கையூட்டு மூலம் பெரும் பணம் சேர்த்ததும், அதை சட்டவிரோத காரியங்களுக்கு செலவழித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்து ஆணையம் பிறப்பித்த அறிவிக்கையிலும் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனாலும், அமைச்சர் விஜயபாஸ்கர் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஊழல் புகாருக்கு உள்ளாகாத அமைச்சரே இல்லை என்ற நிலைக்கு தமிழக அமைச்சரவையின் மாண்பு தரையிறங்கிக் கொண்டிருக்கிறது.

காமராசர் காலத்தில் நேர்மையாளர்களும், அறிவார்ந்தவர்களும் மட்டுமே வீற்றிருந்த அமைச்சரவையில் இப்போது மோசடி செய்தவர்களும், ஊழல் செய்தவர்களும் மட்டும் தான் வீற்றிருக்கின்றனர். இந்த நிலையை அடியோடு மாற்ற முடியாது என்றாலும், இழந்த மாண்பை ஓரளவாவது மீட்பதற்கு வசதியாக, மோசடிப் புகாருக்கு ஆளான அமைச்சர் காமராஜ் மீது உடனடியாக மோசடி வழக்குப் பதிவு கைது செய்வதுடன், அமைச்சரவையிலிருந்தும் நீக்குவதற்கு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in