தமிழகத்தில் அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறை செய்யும் அரசாணைகளின் விளைவுகள் என்ன? - சாதக, பாதகங்கள் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து

தமிழகத்தில் அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறை செய்யும் அரசாணைகளின் விளைவுகள் என்ன? - சாதக, பாதகங்கள் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து
Updated on
3 min read

தமிழகத்தில் அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரன்முறை செய்வது தொடர்பான இரு அரசாணைகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று சமர்ப்பித்துள்ளது. அந்த அரசாணைகளில் இடம்பெற்றுள்ள அம்சங்களால் ஏற்படும் விளைவுகள் குறித்து பல்வேறு தரப்பினர் கூறியுள்ள கருத்துகள் வருமாறு:

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்:

(அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்)

இந்த அரசாணைகள் அடிப்படை யிலேயே குறைபாடு உடையவை. ஏற்கெனவே பதிவுத்துறையில் உள்ள அரசாணையை இப்போது நகரமைப்பு இயக்குநரகம் கொஞ்சம் மாற்றி புதிதாக பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டங்களை இந்த அரசாணை கள் நீர்த்துப்போகச் செய்துள்ளன. அங்கீகாரமில்லாத ஒரு ஏக்கர் மனைப் பிரிவை சாலை வசதி, திறந்தவெளி, குடிநீர், மின்சாரம், கழிவுநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் முறையாக வரன்முறைப்படுத்த ரூ. 20 லட்சம் வரை செலவாகும் என ஒரு பொதுப் பணித்துறை அதிகாரியே என்னிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது அரசு பிறப்பித்துள்ள அரசாணைகளின்படி ஒரு ஏக்கர் நிலத்தை வரன்முறைப்படுத்த அதிக பட்சமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரைதான் வசூ லாகும். இந்த சொற்ப தொகையை வைத்துக்கொண்டு எப்படி வரன் முறைப்படுத்த முடியும்.

ஆண்டுக்கு ரூ. 5 லட்சம்கூட வருவாய் இல்லாத பஞ்சாயத்து, எப்படி ரூ. 20 லட்சத்தை செலவு செய்ய முடியும்? இந்த அரசாணையில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன என்று அதை இயற்றிய அதிகாரிகளுக்கும் தெரியும். அமைச்சர்களுக்கும் தெரியும். உயர் நீதிமன்ற தடையால் பாதிக்கப்பட்டுள்ள ரியல் எஸ்டேட் தரப்பினரை திருப்திப் படுத்துவதற்காகவே இந்த அரசாணைகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கண்டிப்பாக இந்த அரசாணைகளை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது என்றே நம்புகிறேன்.

விதையை விதைத்துவிட்டு எதுவுமே செய்யாமல் நேரடியாக அறுவடை செய்கிறோம் எனக்கூறிய கதையாக இந்த அரசாணை உள்ளது. கட்டணம் வசூலிப்பதற்கு மட்டுமே அரசாணையில் வழிவகை உள்ளது. வரன்முறைப்படுத்துவதற்கான அடிப்படைத் தேவைகளை எவ்வாறு செய்து தருவோம் என அதில் தெரி விக்கவில்லை. அதுபோல ஒரு திட் டத்தை எவ்வாறு அமல்படுத்துவோம் என்றும் கூறவில்லை. காகித வடி விலான இந்த அரசாணைகள் நடை முறையில் சாத்தியமற்ற ஒன்று. விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டுமென்று நான் தொடர்ந்த வழக்கு தொடர்பாக இந்த அரசாணையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

வீட்டுமனைப் பிரிவுக்கான இடங்கள் விவசாயத்துக்கு லாயக்கற்றதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என அரசாணை கூறுகிறது. ஆனால் நன்றாக விளையும் நிலங்களை 3 ஆண்டுகள் தரிசாக போட்டுவிட்டு, அதையே பின்னர் மனைப்பிரிவாக மாற்றுவதை தடுப்பதற்கு இந்த அரசாணையில் எந்த உத்தரவும் இல்லை.

அதேபோல அங்கீகாரமற்ற விளை நிலங்களை பத்திரப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்த போதும், கடந்த 7 மாதங்களில் அந்த உத்தரவை மீறி தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 760 பத்திரங்கள் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த உத்தரவை அவமதித்த அதிகாரிகளை இடைநீக்கமோ அல்லது பணிநீக்கமோ செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வுள்ளேன்.

கே.பாலகிருஷ்ணன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்):

விவசாயத்துக்கு தகுதியான நிலங் களில் வீட்டுமனைகளை அமைக்கக் கூடாது என்றும், ஏற்கெனவே அமைக் கப்பட்டிருந்தால், அதை வரன்முறைப் படுத்த அனுமதி வழங்கக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் விவசாயத் தொழிலும், விவசாய நிலங்களும் பாதுகாக்கப்படும். நீர்நிலை புறம்போக்கு நிலங்களை, வேறு பயன் பாட்டுக்கு மாற்ற தடை உள்ள நிலையில், அங்கு வீட்டு மனைகளை அமைக்கவே முடியாது. அப்படி இருக்கும்போது, பொது நீர்நிலைகள் மற்றும் அதை பாதிக்கும் வகையில் உள்ள நிலங்களில் வீட்டு மனைகளை அமைக்க கூடாது என்று உத்தரவிட்டிருப்பது நெருடலாக உள்ளது.

செந்தில் ஆறுமுகம் (சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர்):

இந்த 2 அரசாணைகளில் உள்ள விதிமுறைகள் அனைத்தும் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பவைதான். இத்தனை விதிகளையும் மீறித்தான் வீட்டு மனைகளும், கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. இதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த அம்சமும் இந்த அரசாணைகளில் இல்லை.

குறிப்பிட்ட பகுதியில் விதிகள் மீறப்பட்டால் இந்த அதிகாரிகள்தான் பொறுப்பு என யாரையும் இந்த அரசாணை சுட்டிக்காட்டவில்லை. நடவ டிக்கை எடுக்கப்படும் என்றால் தான் அதிகாரிகள் பயப்படுவார்கள். தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்யாவிட்டால் மீண்டும் விதிமீறல்கள் நடக்கவே செய்யும்.

ஆர். இளங்கோவன் (விஷால் பிரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைவர்):

பொதுவாக எங்களைப் போன்ற பெரிய கட்டுமான நிறுவனத்தினர் அங்கீகாரம் இல்லாத மனைகளில் திட்டங்களை செயல்படுத்தமாட்டோம். புஞ்சை நிலமாக இருந்தால் அவற்றை முறையாக மாற்றிய பிறகே கட்டிடங் களை கட்டுவோம். அதேபோல நன்செய் நிலங்களில் கட்டுமான பணிகளுக்கு உரிய அனுமதி பெறும் முறையை பின்பற்றி வருகிறோம். மேலும் ஏற்கெனவே உள்ள விதிமுறைகளை பின்பற்றுவதால் எங்களுக்கு சிரமம் ஏற்படாது. ஏஜென்டுகள் மூலம் கற்களை வரிசையாக வைத்து விவசாய நிலங்களை மனைகளாக மாற்றியவர்களுக்கு மட்டுமே இதனால் பிரச்சினை ஏற்படும்.

என்.நந்தகுமார் (இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) தமிழ்நாடு முன்னாள் தலைவர்) :

அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்ததால் அரசின் பத்திரப் பதிவுத் துறைக்கு வருவாய் மிகவும் குறைந்துவிட்டது. அதனால் வரன்முறைப்படுத்துதல் மற்றும் புதிதாக மனைகளுக்கு அனுமதி வழங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வகுத்து அரசாணை வெளியிட்டிருக்கிறார்கள். வரன்முறைப்படுத்துதலை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். அந்தக் காலக்கட்டத்திலும் தனிநபர்கள்தான் வரன்முறைப்படுத் துதல் மூலம் பயன்பெற வேண்டுமே தவிர, சட்டவிரோதமாகச் செயல்படும் கட்டுமான நிறுவனத்தினர் பயன் பெற்றுவிட அனுமதிக்கக்கூடாது. அப்போதுதான் இந்த அரசாணைகளின் நோக்கம் நிறைவேறும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in