

டாஸ்மாக் கடைகளைத் திறப்பதில் விதிகளை பின்பற்றுவதைவிட மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதே முக்கியம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டதின் எதிரொலியாக தமிழகத்தில் 3000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களில் திறக்க முயற்சிப்பதாக தமிழகம் முழுவதும் கண்டனக் குரல் எழுந்தது.
மேலும், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களில் திறக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது. பல்வேறு தரப்பினரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுக்கள் அத்தனையும் ஒரே வழக்காக விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எம்.கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், மக்கள் எதிர்ப்பு காரணமாக 41 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகவும் விதிகளுக்கு உட்பட்டே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதில் விதிகளை பின்பற்றுவதைவிட மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதே முக்கியம் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.