கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய தனிநபர்களை ஈடுபடுத்தினால் குற்றவழக்கு பாயும் - சேலம் மாநகராட்சி எச்சரிக்கை

கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய தனிநபர்களை ஈடுபடுத்தினால் குற்றவழக்கு பாயும் - சேலம் மாநகராட்சி எச்சரிக்கை
Updated on
1 min read

சேலம்: 'தனி நபர்களை வைத்து கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என சேலம் மாகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சமூக வலைதளத்தில் தனிநபர் ஒருவர் பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் கழிவுநீரை சுத்தம் செய்வது போன்ற நிகழ்வு சேலம் மாநகராட்சியுடன் தொடர்புபடுத்தி பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது சம்மந்தப்பட்டநபர் மாநகராட்சி பணியாளர் அல்லாதவர், தனிநபராகவும் அப்பகுதியில் உள்ள சிலரின் கோரிக்கையின் அடிப்படையில் அந்த நபர் சாக்கடையில் இறங்கி பணி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 கோட்டங்களில் உள்ள எந்த கழிவுநீர் கால்வாயிலும் மாநகராட்சி அனுமதியின்றி தனிநபர்களை சுத்தம் செய்ய இறக்குவது தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும். கழிவுநீர் கால்வாய்களில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டு சுத்தம் செய்ய வேண்டி இருப்பின், பொதுமக்கள் சம்மந்தப்பட்ட வார்டின் தூய்மை மேற்பார்வையாளரிடர், சுகாதார ஆய்வாளரிடர், சுகாதார அலுவலரிடம் அல்லது மாநகர நல அலுவலரிடம் தான் தகவல் தெரிவிக்க வேண்டும்.

இது போன்ற செயலில் ஈடுபாடுவோர் மீது குற்றவழக்கு பதியப்பட்டு கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாநகராட்சியை பொறுத்தவரை அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தளவாட பொருட்கள் போதுமான எண்ணிக்கையில் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தூய்மைப் பணியில், மாநகராட்சியின் துய்மை பணியாளர்கள் ஈடுபடும் போது அவற்றை கட்டாயம் உபயோகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்ய தனிநபர் அனுமதிப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in